ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டவர்கள் கடற்படையினரால் மீட்பு

தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

வட மத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, தலைமன்னாரின் ஏழாம் மணல்திட்டில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆறு பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களை சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வருவதாகக் கூறிய ஆட்கடத்தல்காரர்கள், அங்கு கைவிட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது. இவர்கள், 8 முதல் 56 வயதுக்குட்பட்ட வவுனியா, மடு மற்றும் கொக்கடிச்சோலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் தலைமன்னார் பொலினஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.