தேசிய மக்கள் சக்தியின் ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்…

நாட்டில் நிலவும் வறுமையை ஒழித்து, கிராமிய ரீதியில் பொருளாதார மேம்பாடு மற்றும் அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்குடன், தேசிய மக்கள் சக்தியின் ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 48 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான ‘பிரஜா சக்தி’ தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, நாட்டில் நிலவும் வறுமையின் தீவிரத்தை எடுத்துரைத்தார்.

இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வறுமையான மக்களைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வறுமை ஒழிப்பு என்ற பெயரில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை தோல்வியடைந்தன.  அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதே இந்தத் தோல்விக்குக் காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டமானது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சிந்தனைக்கு அமைவாகவே அமுல்படுத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குறிப்பிட்டார்.