தமிழர் தாயகப்பகுதிகளின் பெயர்கள் சிங்கள மொழிக்கு மாற்றப்படுவதாக ரவிகரன் குற்றச்சாட்டு

தமிழர் பிரதேசங்கள் தற்போது சிங்கள பெயர்களாக மாற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் முல்லைத்தீவு மாவட்டமும் பறிபோகும் வாய்ப்புள்ளதாக ரவிகரன் குறிப்பிட்டார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்கு வருடங்களுக்குள் முல்லைத்தீவில் சனத்தொகை குறைந்து சென்றுள்ளதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தொழில் ஒன்றை நேர்த்தியாக செய்ய முடியாத நிலையிலேயே மக்கள் இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வதாக ரவிகரன் கூறினார். அத்துடன் தமிழ் மக்களின் இருப்பை அளிப்பதற்காக சட்டவிரோத சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தாலும் அவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.