யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் உரிய முறையில் அவர்களிடம் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக தையிட்டி விகாரையைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாகதீப விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
நயினாதீவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, நாகதீப விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தையிட்டி விகாரைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுடன், விகாரையைச் சுற்றியுள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை அதன் உண்மையான உரிமையாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே காணிகளை விடுவிப்பது சாத்தியமான ஒன்றாகும். எனவே, இந்த ஆட்சிக் காலத்திலேயே பாதிக்கப்பட்ட மக்களின் நிலங்களை அவர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீண்டகாலமாகத் தொடரும் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை விகாராதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு, இணக்கமான முறையில் காணி விடுவிப்புக்கள் இடம்பெற வேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.


