“ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள்மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு, நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும்.” இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது கருத்து வெளியிட்ட ரவி கருணாநாயக்க எம்.பி. “ ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டு 17 வருடங்கள் கடந்துள்ளன. அவர் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்படவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில்கூட பதில் வழங்கப்படுகின்றது. இது விடயத்தில் ஏன் இப்படி நடக்கின்றது.” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “ ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் ஊடக நிறுவனங்கள்மீதூன தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி கொலையாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களை கண்டறிவதற்கும், நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.” – என்றார்.



