பல்தள நிறுவனங்கள் ஆற்றலுடன் செயற்படல் அரச இறைமைக்குத் தேவை குடிசார் அமைப்புக்கள் ஆற்றலுடன் செயற்படல் மக்கள் இறைமைக்குத் தேவை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 373

“இன்று நாங்கள் உலகின் வல்லாண்மைச் சக்திகள் உலகைப் பிளவுபடுத்துவதில் நடைமுறை விருப்ப வேட்கையுள்ளவர்களாக உள்ள உலகில் வாழ்கின்றோம். (We are living in a world of great powers with a real temptation).  இதனால் பல்தள நிறுவனங்கள் செயற்படுவது குறைந்த அளவில் குறைவான ஆற்றல் உள்ளனவாகச் செயற்படுகின்றன. (Multilateral institutionas are functioning less and less effectively).” இவ்வாறு பிரான்சின் அரசுத்தலைவர் மக்கரோன், பிரான்சின் வெளிநாட்டுத்தூதுவர்களாகச் செயற்படுபவர்களுக்கு மத்தியில் அரச ‘எல்இசி’ அரண்மனையில் வருடாந்த உரையினை நிகழ்த்தும் பொழுது தெரிவித்துள்ளார். இவ்வுரையில் ‘டொனால்ட் ட்ரம்ப் கீழுள்ள அமெரிக்கா அனைத்துலக சட்டங்களில் இருந்து தன்னை விடுவிப்பதுடன் படிப்படியாக தன்னுடைய சில கூட்டணிகளில் இருந்து விலகியும் வருகிறது என்று மக்ரோன் எச்சரித்தும் உள்ளார். பிரான்சிய அரசத்தலைவரின் எதார்த்தமான இந்த உரை ஒன்றுக்கு மேற்பட்ட பல அரசுக்கள் இணைந்து பல்தள நிறுவனங்களை நிறுவியும் இருப்பவற்றை ஆற்றலுடன் செயற்பட வைத்தும்  அனைத்துலக சட்டங்களின் அடிப்படையிலான புதிய உலக அரசியல் ஒழுங்கை மீள்நிறுவி  ட்ரம்பின் அமெரிக்க முனைவாக்க உலக அரசியல் முறைமையை எல்லைப்படுத்தி நாடுகளின் அரசஇறைமையைப் பாதுகாத்தலுக்கு பல்தள நிறுவன ஆற்றலுள்ள செயற்பாடு முக்கியமானது என்ற உண்மையை உணர்த்துகின்றது.
ஆனால் பல்தள நிறுவனங்களை உருவாக்கல் நாடுகளை ஆட்சிபப்டுத்தும் ஆட்சியாளர்களால் உருவாக்கப்படும் பேணப்படும் முன்னேற்றப்படும் அமைப்பு முறைமை என்பதால் ஈழத்தமிழர்கள் போன்ற உலகின் மூத்தகுடிகளாக உள்ள தேச இனங்கள் சில தங்கள் தாயகத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வந்தாலும் காலனித்துவ கால ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய ஆட்சிமுறைமைகளால் தங்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் காலனித்துவ ஆட்சியாளர்கள் அந்த நாடுகளுக்குச் சுதந்திரம் வழங்கும் பொழுது தங்களது விருப்பப்படி ஏற்படுத்திய புதிய ஆட்சி முறைகளில் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் அடிப்படை மனித உரிமையைப் பயன்படுத்த இயலாது இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு என்பவற்றுக்கு ஆளாகி வருவது இன்றைய உலகின் கவனத்தில் எடுக்கப்படாத பிரச்சினையாகத் தொடர்கிறது.
இந்நிலையில் இத்தகைய மக்கள் தங்களின் வரலாற்றுத் தாயகத்தில் தங்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளின் அடிப்படையில் தங்களுக்கு எதிரான இனஅழிப்பு அரசியலுக்கு மத்தியிலும் தங்களுக்கான வாழ்வைத் தங்களால் தோற்றுவிக்கப்படக்கூடிய குடிசார் அமைப்புக்கள் வழியாகவே நடைமுறையில் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
2026இல் ஈழத்தமிழர்கள் பிரித்தானியா தாங்கள் உருவாக்கிய சிலோன் என்னும் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் ஈழத்தமிழர்களிடம் இருந்து தாங்கள் காலனித்துவ போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சி வழி கையகப்படுத்திய யாழ்ப்பாண அரசின் இறைமையையும் தாங்கள் நேரடியாகவே கைப்பற்றிய வன்னியரசின் இறைமையையும் இணைத்து சோல்பரி அரசியல் அமைப்பின் 29(2) வது பிரிவின் படி தொடர்ந்தும் மதங்களுக்கு இனங்களுக்கு எதிரான சட்டங்கள் சிலோன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் பிரித்தானிய பிரிவிக்கவுன்சிலில் நீதி பெறலாமெனக் கட்டமைத்த அரசியலமைப்பு விதியின் படி பிரித்தானிய முடிக்குரிய தலைமையே ஈழத்தமிழர்களின் மீயுயர் இறைமையாளராக தொடரக்கூடிய முறையில் 04.02. 1948 இல் சுதந்திரம் வழங்கிய 78 வது ஆண்டினை 04.02.2026 இல் எதிர்கொள்கின்றனர். இந்நாளில் ஈழத்தமிழர்களின் குடிசார் அமைப்புக்களை ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் ஒருங்கிணைத்து உலகின் மக்களுக்கு தாங்கள் இந்த 78 ஆண்டுகளும் காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக ஈழத்தமிழர் தேசியப்பிரச்சனை  தொடர்வதால் அதனை அனைத்துலக மக்களும் நாடுகளும் அமைப்புக்களும் கவனத்தில் எடுத்து தங்களுக்கான பாதுகாப்பான அமைதியும் வளர்ச்சிகளும் மீளுறுதி பெற உதவ வேண்டுமெனத் தேச ஒருமைப்பாட்டுடன் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் அனைத்துலகிலும் அந்நாடுகளின் குடிகளாகப் புலம்பதிந்து ஈழத்தமிழ்த்தேசியத்தவர்களாக (Nationality)  உள்ளவர்கள் ஈழத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்களாக அனைத்துலகிலும் பலமாகக் குரல் எழுப்ப வேண்டுமென ‘இலக்கு கோரி’ அதற்கான முன்ஆயத்தங்களை அடுத்த இருவாரங்களிலும் செய்வது ஈழத்தமிழர்களின் தாயகக் கடமையாகவும் வரலாற்றுக்கடமையாகவும் உள்ளதென்பதை வலியுறுத்துகிறது.
அவ்வாறே எதிர்வரும் மே மாதம் 14ம் திகதியன்று ஈழத்தமிழர்கள் தங்களது பிரிக்க இயலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் தரும் தனியரசினை மீள்அமைக்கப் போகவதாக உலகிற்கும் 22.05. 1972 முதல் தங்களை ஆளும் அரசியலமைப்பு தகுதியினை இழந்து விட்ட சிறிலங்கா பௌத்த சிங்களக் குடியரசுக்கும் வட்டுக்கோட்டையில் ஈழத்தமிழர்களின் தலைமை அரசியல் கட்சியாக விளங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பிரகடனப்படுத்திய 50வது – பொன்விழா ஆண்டு  ஆதலால் பெப்ரவரி 4 முதல் 14.05. 2026 வரை இந்த ஈழத்தமிழர் வரலாற்றை அனைத்து மக்களுக்கும் தாயகத்திலும் உலகிலும் தெரிவிப்பதற்கான செயற்திட்டங்களை உருவாக்க வேண்டுமென இலக்கு பணிவன்பாக வேண்டுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் “ தமிழர்களுக்கான அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும். கடந்த காலங்களில் பல அரசுக்களும் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்தன ஆயினும் நடைமுறைப்படுத்தவில்லை. அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல் உண்மையான மற்றும் நிரந்தர அரசியல் தீர்வை வழங்குவதற்குத் தற்போதைய அரசு பொறுப்புடன் செயற்படும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சமத்துவம், பாதுகாப்பு, மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற  அடிப்படை விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும். அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய ஒற்றுமையான நாட்டைக் கட்டியெழுப்புவதே இந்த அரசின்  நோக்கமாகும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நாட்டின் உள்நாட்டு விடயமாக இருப்பினும் அனைத்துலக சமுகத்திடம் சிறிலங்கா அரசு வெளிப்படையாகவும், பொறுப்புடனும் செயற்படுவதாக நம்பிக்கை அளிக்க வேண்டிய தேவையும் உள்ளது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களது நம்பிக்கையை மீட்டெடுப்பதே இந்த அரசின் முதன்மையான இலக்கு. அதற்காக அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படுமென்று உறுதியளிக்கின்றோம். வாக்குறுதி மட்டுமல்ல அதை நடைமுறையில் நிறைவேற்றும் அரசாக இந்த அரசு செயற்படும்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியினரின் தமிழக – மேற்குலக நாடுகளின் வருகையின் காலத்தினதும் தேவையினதும் முக்கியத்துவத்தை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் இந்தப் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது. கட்சி அரசியலைக் கடந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈழத்தமிழர்களின் தேச ஒருமைப்பாட்டிற்கும் மக்கள் இறைமை உறுதிப்பாட்டுக்கும் புதிய உற்சாகத்தை ஈழத்தமிழர்களுக்கு மத்தியில் அளிக்கும் வகையில் செயற்படத் தொடங்கியுள்ளமையும் தமிழக மக்களின் இனத்துவ ஒருமைப்பாட்டை வளர்க்க முயற்சித்து வருவதும் 2026ம் ஆண்டுக்குப் புதிய நம்பிக்கை தருவதாக உள்ளது. இதனை மேலும் வளர்க்க சந்தேகங்கள் கேள்விகளை நேரடியாகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருடனான உரையாடல்கள் வழி அனைத்து ஈழத்தமிழர்களும் செயற்பட வேண்டிய காலமாக 2026 அமைகிறது.
ஈழத்தமிழர்களுக்கான நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு என்பது ஈழத்தமிழர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை இலங்கைத் தீவில் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள். பிரித்தானிய காலனித்துவ காலத்தின் பின்னர் இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களின் இருப்பைச் சிங்களவர்கள் இலங்கையின் யாழ்ப்பாண அரசின் வன்னியரசின் நிலப்பரப்புக்களாக அறிவித்து இலங்கைத் தீவுக்குச் சிங்களவர்கள் பிரிவினை கோரிய பின்னணியில் 1978 முதல் 2009 வரை ஈழத்தமிழர்கள் தங்களின் யாழ்ப்பாண வன்னியரசின் நிலப்பரப்புக்களில் தங்களுக்கான நடைமுறையரசை மீள் உறுதி செய்து நடைமுறையரசை உலகிற்கு 31 ஆண்டுகள் வெளிப்படுத்தியமை வரலாறு. இந்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியை நியாயமான நிரந்தரத் தீர்வை வெளிப்படுத்த வைக்க வேண்டிய ஆண்டாக 2026 அமைகின்றது என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது. இதற்கான செயற்பாடுகளும் ஈழத்தமிழர்களின் பொருளாதார சமுக வாழ்வின் நலன்களுக்கான செயற்பாடுகளும் இவ்வாண்டில் ஈழத்தமிழர்களின் குடிசார் அமைப்புக்களின் இணைப்புக்களுடன் முன்னெடுக்கப்பட்டு குடிசார் அமைப்புக்களின் ஆற்றல் உள்ள செயற்பாடு மக்கள் இறைமைக்குத் தலையானது என்பதை உணர்த்த அனைவரும் உழைக்குமாண்டாக இவ்வாண்டை அமைத்துக் கொள்வோம்.
ஆசிரியர்

Tamil News