இலங்கையால் கடந்த மார்ச் மாத இறுதிக்குள் மீளச்செலுத்தப்படவேண்டியிருந்த ஒரு பில்லியன் டொலர் கடனை மீளச்செலுத்துவதற்கான கால எல்லையை இந்தியா மேலும் ஒரு வருடத்தினால் நீடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உதவும் நோக்கிலேயே இந்தியா இத்தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்ததாக ரொயிட்டர்ஸ் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை கடந்த ஆண்டு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் இந்தியாவினால் மொத்தமாக வழங்கப்பட்ட 4 பில்லியன் டொலர் பெறுமதியான அவசர உதவியிலேயே மேற்குறிப்பிட்ட ஒரு பில்லியன் டொலர் கடனுதவியும் உள்ளடங்குகின்றது.
இந்தக் கடனைக் கடந்த மார்ச்மாத இறுதிக்குள் மீளச்செலுத்தவேண்டியிருந்த நிலையில், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை அடுத்து அதனை மீளச்செலுத்துவதற்கான காலப்பகுதி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பதாக ரொயிட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.