இலங்கைக்கு அனர்த்த நிவாரண உதவியாக ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ அவசர மனிதாபிமான உதவியை விடுவித்துள்ளது.
இந்த நிதி மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் என ஐரோப்பிய ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த 1.8 மில்லியன் யூரோ நிதியிலிருந்து, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பின் அனர்த்தப் பதிலளிப்பு அவசர நிதியத்தின் மூலம் 5 லட்சம் யூரோ அனுப்பப்பட்டுள்ளது.
அத்தியாவசிய நிவாரணம், பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் அவசர உதவிகளை வழங்குவதன் மூலம், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நிற்கிறோம் என்று அனர்த்தத் தயார்நிலை, நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான ஆணையாளர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் அதன் சிவில் பாதுகாப்புப் பொறிமுறை மூலம் பொருட்களின் அடிப்படையிலான உதவிகளையும் இலங்கைக்கு வழங்குகிறது. இதில், ஜேர்மனி 4,600 தங்குமிடப் பொருட்களையும், பிரான்ஸ் 3,400 தங்குமிடப் பொருட்களையும் வழங்கியுள்ளன.
அத்துடன், இத்தாலி பொறியியல் நிபுணர்கள் குழுவை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் வலுசக்தித் துறையில் “பாதுகாப்பான, மலிவான மற்றும் நிலையான சக்தி” என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து இலங்கை அரசாங்கம் 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் உலக வங்கி குழுமத்தின் மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டுக்கான 70 சதவீத மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்குக்கு ஏற்ப, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை மின் கட்டமைப்பில் இணைப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தப் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மாற்றத்தில் தனியார் துறையின் முதலீடுகளை அதிகரிக்க உலக வங்கி கட்டண உத்தரவாத வசதியையும் வழங்கத் திட்டமிட்டுள்ளது.
மொத்த திட்டச் செலவான சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களில், முதல் கட்டமாக 30 மில்லியன் டொலர்களை உலக வங்கி வழங்குகிறது. இந்தத் திட்டம் வலுசக்தி அமைச்சு போன்ற தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இலங்கை மின்சார சபையினால் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



