அடுத்த நிதியாண்டிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

2026ஆம் நிதி ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் அரச செலவீனமாக 4,43,435 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4,21,824 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான செலவீனம்  பல்வேறு  காரணிகளை  அடிப்படையாகக் கொண்டு 21,610 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தை காட்டிலும் 2026ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் விடயதானங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

அரச செலவீனத்துக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64,800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்  விடயதானங்களுக்கு 61,744கோடியே 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்காக 3,055 கோடியே  50 இலட்சம் ரூபா மேலதிகமாக  ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் இரண்டாவது மதிப்பீடு நிதி அமைச்சர் என்ற ரீதியில்   ஜனாதிபதியினால் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து நவம்பர்  8ஆம் திகதி முதல் டிசம்பர்  5ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.