தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைய சிறுபான்மையின நிபுணர்களுக்குத் தயக்கம்!

தொல்பொருள்தொடர்பான ஆணைக்குழுவில் உறுப்பினராக இணைவதற்கு, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. சிறந்த பரிந்துரைகளை முன்வைக்கும் பட்சத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், அண்மையில் நியமிக்கப்பட்ட தொல்லியல் ஆணைக்குழுவுக்கு சிறுபான்மைச் சமூகப் பிரதிநிதிகள் இல்லை என்று அதிருப்தி தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-தொல்லியல் ஆணைக்குழுவில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் இருக்கின்றனர். இதில் இணைவதற்கு புத்திஜீவிகள் பலர் விரும்பவில்லை. இணைக்கப்பட்ட சிலரும் பல்வேறு தடவைகள் கூறியே இணைந்தனர். இதற்கு வரலாற்றில் இருந்த பிழையான அனுபவங்கள் காரணமாக இருந்திருக்கலாம். ஆனாலும் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமைச்சர் சுனில் செனவிக்கும் கூறியிருந்தேன். உங்களிடம் யோசனைகள் இருந்தால் அவற்றை முன்வையுங்கள். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் – என்றார்.