சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கே நீதி அமைச்சின் நடமாடும் சேவை! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

நீதி அமைச்சின் நடமாடும் சேவை

பெப்ரவரி இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேசத்தையும் எங்களையும் ஏமாற்றுவதற்காக வடக்கில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெறுகின்றது. இதில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான நடவடிக்கையில் யாரும் பங்கேற்க வேண்டாமென யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்தது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு எதிர்வரும் மே மாதத்துடன் 13 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் நாங்கள் பல போராட்டங்கள், பேரணிகளை நடாத்தியுள்ளோம். எத்தனையோ ஆணைக்குழுக்களுக்கும் ஏறி இறங்கி விட்டோம் எந்த பதிலும் இல்லை.

மாறாக ஒவ்வொரு ஆணைக்குழுக்களும் எம்மை குழப்புகின்ற, அச்சுறுத்துகின்ற வகையில்தான் செயற்பட்டுள்ளார்கள். நாங்களும் பல கடிதங்கள் ஆதாரங்களை வழங்கிவிட்டு ஐ.நா மனித உரிமை பேரவையிடமும் முறையிட்டுள்ளோம்.

எமக்கு சர்வதேசம் தான் பதில் தரவேண்டும். அவர்கள் தான் எமக்கு எங்கள் பிள்ளைளை ,கணவன்மாரை சகோதரர்களை கண்டுபிடித்து தரவேண்டும். இந்த அரசாங்கத்தை நம்பி பலனில்லை.இவர்களுடைய ஆட்சியில்தான் இந்த இனவழிப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றன.

இவர்களிடம் எவ்வாறு உண்மையை பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் மூன்று ஐனாதிபதிகளை கண்டுவிட்டோம் எந்த பதிலும் இல்லை.

எதிர்வரும் பெப்ரவரி இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேசத்தையும் எங்களையும் ஏமாற்றுவதற்காக வடக்கில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெறுகின்றது.

யாழ்ப்பாணத்தில் சனி ஞாயிறு கிழமைகளில் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவையில் பல விடயங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சேவையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் யாரும் செல்ல வேண்டாம் இவர்களை நம்பி எந்த பலனும் இல்லை ஆகவே யாரும் செல்லக்கூடாது என்பதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம் எனவும் யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tamil News