பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்ட விதிகளை சுதந்திரமாக அமுல்படுத்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை, நடைமுறைப் படுத்துவதற்கு தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அதிகாரிகளுக்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை (27) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2018 ஆம் ஆண்டு ஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் இரசாயன கழிவுத் தொட்டியில் விழுந்ததால் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைவாக சுதந்திரமாக செயல்பட்ட அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அந்தச் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அதிகாரிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன் போது வலியுறுத்தினர். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அரச சட்டவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் தயக்கம் காட்டும் நிலை, ஏற்பட்டால் அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் பின்னடைவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் வலியுறுத்தினர்.