தொழிற்சங்கங்களின் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிப்பனியப்போவதில்லை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிப்பனிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 213 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (27 )  கொழும்பில் இடம்பெற்றது.  இதன்போதோ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”சுகாதார சேவையில் நிலவும் மனிதவள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மக்களுக்குத் தரமான சேவையை வழங்குவதே எமது இலக்காகும். வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைப்பதாகக் கூறிக்கொண்டு, நாட்டை விட்டு வெளியேறப்போவதாக மிரட்டி சம்பள உயர்வுகளைக் கோரும் எந்தவொரு தரப்பினரின் கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் பணியப்போவதில்லை. இவ்வாறானவர்களுக்கு எதனை வழங்கினாலும் அவர்கள் நாட்டை விட்டுச் செல்வது உறுதி.  ஆனால், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டுக்காகத் தங்கி நின்று சேவையாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும்.

கடந்த ஓராண்டு காலத்தில் சுகாதார அமைச்சுக்கு 10 ஆயிரம்  ஊழியர்களை இணைத்துக்கொள்ள அனுமதி பெறப்பட்டு, அதில் 8 ஆயிரம் பேர் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.  வரலாற்றில் முதல் முறையாக 4,141 தாதியர்கள் ஒரே கட்டமாக இணைக்கப்பட்டனர். 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த பரீட்சைகள் தாமதமாகி, தற்போது 2025 இல் நடத்தப்பட்டு இந்த 213 உதவியாளர்களும் இன்று நியமனம் பெற்றுள்ளனர். அரசியல் அதிகாரங்களும் அமைச்சர்களும் மாறலாம், ஆனால் அரச சேவை நிலையானதாக இருக்க வேண்டும்.

பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் வைத்தியர்கள் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் முறையான பொறிமுறை எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும். புதிய நியமனம் பெற்றவர்கள் இடமாற்றங்கள் குறித்துச் சிந்திக்காது, மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முன்வர வேண்டும் என்றார்.