ஊடகவியலாளர்கள் மீது இராணுவத்தினர் கெடுபிடி காவல்துறையினர் அனுமதித்தாலும் இராணுவம் அனுமதிக்க மறுப்பு

இலங்கையில்  கொரோனா தொற்று  காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோதும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளது.

குறிப்பாக  முல்லைத்தீவு  நகர் பகுதிக்கு  செய்தி அறிக்கையிட செல்லும் ஊடகவியலாளர்கள், முள்ளியவளை  காவல்துறை பிரிவுக்குட்பட்ட மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள படையிரின் வீதி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். குறிப்பாக  காவல்துறையினர் அனுமதி வழங்கினாலும் குறித்த பகுதியில் உள்ள இராணுவத்தினர் ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அத்திய அவசிய சேவையில் ஈடுபடும் ஏனையவர்கள் மற்றும்  பலர்  தங்களை அடையாளப்படுத்தி சென்று வருக்கின்ற  நிலையில், ஊடகவியலாளருக்கே இராணுவத்தினர் தடை விதித்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட படைத் தளபதி மேஜர் ஜெனரல் உப்புல் ராஜபக்ச அவர்களிடம் முல்லை ஊடக அமைய தலைவர் ச.தவசீலன்  தகவல் தெரிவித்துள்ளார்.