மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக உலக விமானப் போக்குவரத்து வலையமைப்பில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளுக்கு மத்தியில், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) ஒன்றை மாற்று செயல்பாட்டு மையமாக (Alternative Hub) பயன்படுத்தும் முன்மொழிவு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
விமானப் போக்குவரத்து ஆய்வாளர் Ben Schlappig தனது ‘One Mile at a Time’ தளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில், நீண்டகாலமாக குறைந்த பயன்பாட்டில் இருந்த மத்தள விமான நிலையம் அதன் புவியியல் அமைப்பினால் ஒரு முக்கிய மாற்று மையமாக உருவெடுக்கக் கூடியதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பெருங்கடலின் கிழக்கு – மேற்கு வான்வழிப் பாதையில் அமைந்துள்ள இலங்கையின் நிலைமை, உலக விமானப் போக்குவரத்துக்கு முக்கியமான இடமாக மாறுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக பல முக்கிய வான்பரப்புகள் மூடப்பட்டுள்ள நிலையில், மத்தள விமான நிலையம் பாதுகாப்பான மாற்று தளமாக பார்க்கப்படுகிறது.
எமிரேட்ஸ் (Emirates) மற்றும் கட்டார் ஏயார்வேஸ் ( Qatar Airways ) உள்ளிட்ட முன்னணி வளைகுடா விமான நிறுவனங்கள் தமது செயல்பாடுகளின் ஒரு பகுதியை தற்காலிகமாக இலங்கைக்கு மாற்றுவதில் ஆர்வம் காட்டியுள்ளதாக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை முன்னிட்டு, இலங்கை அரசு முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 பெப்ரவரி இறுதியில் ஆரம்பித்த மத்திய கிழக்கு போர்ச் சூழ்நிலையைத் தொடர்ந்து ஈரான், ஈராக், இஸ்ரேல், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வான்பரப்புகள் பகுதியளவில் அல்லது முழுமையாக மூடப்பட்டுள்ளன. இதனால் துபாய், தோஹா மற்றும் அபுதாபி போன்ற உலகின் முக்கிய விமான போக்குவரத்து மையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மத்தள விமான நிலையம் 3,500 மீற்றர் நீளமான ஓடுபாதையை கொண்டுள்ளதுடன், உலகின் மிகப்பெரிய வைட்பொடி (Wide-body) விமானங்களையும் தரையிறக்கக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது. இதனால், பெரிய அளவிலான சர்வதேச விமான சேவைகளை கையாளும் திறன் அதற்கு உள்ளது.
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் தற்போதைய நெருக்கடியால் உருவான இடைவெளியை நிரப்ப அதிகபட்ச திறனில் செயல்பட்டு வருகிறது. லண்டன், பாரிஸ், பிராங்க்பேர்ட் போன்ற நகரங்களுக்கு அதன் A330 விமானங்கள் முழு திறனில் இயக்கப்படுகின்றன. எனினும் மேலதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் தற்போது குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைக்கு வரும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, மார்ச் மாத சுற்றுலாப் பயணிகள் வருகை 20–25% வரை குறைந்ததுடன், சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில சவால்களும் உள்ளதாக விமானப் போக்குவரத்து நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, தரைவழி சேவைகளை விரைவாக விரிவுபடுத்துதல்,போதுமான விமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்தல், விமான ஊழியர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவுச் சேவைகள் ஏற்படுத்தல் ஆகும்.
மத்தள விமான நிலையத்தை மாற்று மையமாக பயன்படுத்தும் இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், அது தற்போதைய நெருக்கடியை சமாளிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த இந்த விமான நிலையத்தின் சர்வதேச முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



