இலங்கையில் முதியோருடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பு

இலங்கையின் முதியோர் மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ‘மன அபிவிருத்தி ஊடாக வாழ்க்கை மாற்றம்’ எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவர்களில் 60 அல்லது 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் முதியோர் மக்கள் தொகை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. அதற்கமைய முதியவர்கள் எதிர்நோக்கும் இந்த மனநலப் பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதனால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது.

சில வேளைகளில் வயது முதிர்வின்போது ஏற்படும் சில மனநோய் அறிகுறிகள் குறித்து மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்க சமூகம் தூண்டப்பட்டுள்ள நிலையில், அதனை ஒரு சாதாரண நிலைமையாகக் காண்பித்து வருவதால் மறதி மற்றும் மனச்சோர்வு போன்ற நோய் அறிகுறிகளைப் புறக்கணிக்க முதியவர்கள் பழகியுள்ளனர்.

இவ்வாறாக முதியோர் மத்தியில் மனநலப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுவதால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அதன் ஊடாக உடல் ரீதியான சிக்கல்கள் அதிகரித்துள்ளது.

தேசிய மனநல காப்பகத்தில் 1999ஆம் ஆண்டு முதியவர்களுக்கென விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான, தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதிகள் இரண்டு உள்ளன. மேலும், அண்மையில் ‘தீகாயு’ எனும் பெயரில் பகல் நேர சிகிச்சை நிலையம் ஒன்றும் உளச்சிகிச்சை மற்றும் நடத்தை முறைகள் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.