இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – சுமந்திரனுடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தக் சந்திப்பின்போது இருதரப்புக்கும் இடையே முக்கியமான விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன, இலங்கையின் அண்மைய அரசியல் மாற்றங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து உயர்ஸ்தானிகரும், எம்.ஏ. சுமந்திரனும் விரிவாகக் கலந்துரையாடினர். விசேடமாக, தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்கால நகர்வுகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தார்.

இந்தியா நிதியளிக்கும் வீடமைப்புத் திட்டங்கள், அகதிகள் மீள்குடியேற்றம் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் ஏனைய சமூக மேம்பாட்டுத் துறைகளில் இந்தியா வழங்கும் உதவிகள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கில் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.