பாகிஸ்தானுக்கான பலஸ்தீன தூதுவர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரிடையே சந்திப்பு

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாகிஸ்தானுக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைரை இஸ்லாமாபாத்தில் உள்ள பலஸ்தீன தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இச்சந்திப்பின்போது இலங்கைக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடியதாகவும், பலஸ்தீனத்தின் இறையாண்மைக்கான இலங்கையின் ஆதரவினை மீளுறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‘கலாநிதி சுஹைர் இலங்கைக்கான தூதுவராகப் பதவி வகித்த காலப்பகுதியில் சகல நாடுகளினதும் இறையாண்மையை வலுப்படுத்துவதற்கான தனது வலுவான கடப்பாட்டை வெளிப்படுத்தினார். அதேபோன்று சுதந்திரமானதும், இறையாண்மையுடையதுமான பலஸ்தீனத்துக்கான எனது கடப்பாட்டை நானும் மீளுறுதிப்படுத்தினேன்’ என்றும் அமைச்சர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.