மஹிந்த, சீன தூதுவர் இடையில் சந்திப்பு…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்திலிருந்து வியாழக்கிழமை (11) வெளியேறியிருந்தார். அவர் அங்கிருந்து செல்ல முன்னர் இலங்கைக்கான சீன தூதுவர் அங்கு சென்று அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘விஜேராமவிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து நான் புறப்படுவதற்கு முன்னர், இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வருகைக்கு நான் நன்றி தெரிவிப்பதுடன், எமது நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர மற்றும் தனிப்பட்ட உறவு ரீதியான நீடித்த நட்புறவை நான் அன்புடன் நினைவுகூருகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை இன்று முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் பலரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்திப்பதற்கு விஜேராம இல்லத்துக்குச் சென்றிருந்தனர். ஆதரவாளர்களின் கோஷங்களுக்கு மத்தியில் அவர் அங்கிருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.