இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert), துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் பிராந்தியத் தொடர்புகளை வலுப்படுத்துதல், விமானப் போக்குவரத்து மற்றும் துறைமுக உட்கட்டமைப்பு அபிவிருத்தி, புதிய முதலீடுகளை ஈர்த்தல் போன்ற முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கை ஒரு முக்கிய மையமாகத் திகழ்வதால், இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளதாகத் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.
சமீபத்தில் இலங்கையைப் பாதித்த ‘டித்வா’ புயல் சேதங்கள் குறித்து கவலை தெரிவித்த தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பிரான்ஸ் மனிதாபிமான உதவிகளை வழங்கியதை நினைவு கூர்ந்தார்.
அத்துடன், பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (AFD) ஊடாக மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆதரவு வழங்க பரிசீலிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
புயல் பாதிப்புகளுக்கு மத்தியிலும், இலங்கைக்கு வருகை தரும் பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு, பயண ஆலோசனைகளை (Travel Advisory) சாதகமாகப் பேண பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விமானப் போக்குவரத்துத் துறையில் பிரான்ஸின் நவீன தொழில்நுட்பங்களான சிக்னல் அமைப்புகள் மற்றும் ரேடார் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, மத்தல விமான நிலையத்தில் பிரான்ஸின் பிரபல ‘எயார்பஸ்’ (Airbus) நிறுவனம் முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தூதுவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டம் தொடர்பாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கைகள் கிடைத்தவுடன், பொருத்தமான முதலீட்டு முறைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்தார்.
இலங்கையின் மூலோபாய அமைவிடத்தைப் பயன்படுத்தி வான் மற்றும் கடல்வழித் துறைகளை மேம்படுத்த பிரான்ஸுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்



