மகிழ்ச்சிக்கான அடுத்த பத்தாண்டு காலத் திட்டமாக மனித உரிமைகளைப் பேணலையும் – மக்கள் நலத்திட்டங்களையும் அமைக்க! உலக மகிழ்ச்சி நாள் 10வது ஆண்டு அறிக்கை வலியுறுத்தல்.’மக்கள் இறைமை பேணப்படுகையிலேயே மகிழ்ச்சி நடைமுறைச் சாத்தியமாகும்’ என்கிறது உலக மகிழ்ச்சிநாள் வார இறுதிநாளான இன்று வெளியாகும்; ‘இலக்கின் இலக்கு’ இலக்கு வாராந்த மின்னிதழின் 100 ஆசிரியதலையங்கங்களின் தொகுப்பு நூல்
ஓவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் உலக மகிழ்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான மையக்கருத்தாக ஒருவருக்கு ஒருவர் அக்கறையுள்ளவர்களாக இருங்கள் – நன்றியுள்ளவர்களாக இருங்கள் – இரக்கம் உள்ளவர்களாக இருங்கள்’ என்ற விருது வாக்கியம் முன்வைக்கப்பட்டுள்ளது. பத்தாவது ஆண்டறிக்கையாக வெளிவரும் இவ்வாண்டு;க்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் மகிழ்ச்சிக்கான அடுத்த பத்தாண்டுகாலச் செயற்பணித் திட்டமாக மனித உரிமைகளைப் பேணி மக்கள் நலத் திட்டங்களை உருவாக்குமாறு உலகநாடுகளையும் உலக அமைப்புகளையும் ஐக்கிய நாடுகள் சபை நெறிப்படுத்தியுள்ளது.
இந்த ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நோக்கை உலகின் மூத்த குடிகளாக இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் மக்களுக்கும் ஐக்கியநாடுகள் சபை அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியே இலக்கு மின்னிதழ் ஒவ்வொரு வாரமும் வெளிவருகிறது.
இந்த ‘ இலக்கு’ மின்னிதழ் மக்களின் ‘ மக்கள் இறைமை’ பேணப்படுகையிலேயே மகிழ்ச்சி நடைமுறைச் சாத்தியமாகும்’ என்ற உண்மையை வலியுறுத்தி வருகிறது. மனித உரிமைகளைப் பேணுவதாக இருந்தாலும் சரி அல்லது மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக இருந்தாலும் ஒரு நாட்டை உருவாக்க தேச உருவாக்கத்தில் தங்கள் இறைமையைப் பகிர்ந்த தேச மக்கள் சமத்துவமாகவும் சகோதரத்துவமாகவும் சுதந்திரத்தன்மையுள்ளவர்களாகவும் அந்நாட்டினை உருவாக்கத் தங்கள் இறைமையைப் பகிர்ந்துள்ள ஒவ்வொரு தேசமக்களாலும் மதிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் இந்த மண் எங்களின் சொந்த மண் என்கிற இறைமை தரு தனிமனித மகிழ்ச்சி அந்த நாட்டுக்கு வரக்கூடிய சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக அடக்குமுறைகளை ஒடுக்குமுறைகளை அது உள்நாட்டில் எழுந்தாலும் சரி அல்லது வெளிநாடுகளால் ஏற்படுத்தப்பட்டாலும் சரி நாம் ஒரே தேசத்தவர் என்ற தேசப்பற்றுடன் எதிர்த்து வினையாற்றி தேசத்தின் பாதுகாப்பான அமைதி வாழ்வை உறுதி செய்ய முடியம். இதனாலேயே ‘மக்கள் இறைமை’ சமமாகப் மதிக்கப்படும் பொழுதே தனிமனிம மகிழ்ச்சி நடைமுறைச் சாத்தியம் என ‘இலக்கு’ வலியுறுத்தி வருகிறது.
இலக்கின் இந்த இலக்குக்கு இயற்கை உதவும் செயலாக, உலக மகிழ்ச்சிநாள் இடம்பெறும் இவ்வாரத்தின் இறுதிநாளான 26.03. 2023 இல் இலக்கு மின்னிதமிழின் நூறு ஆசிரியத் தலையங்களை தொகுத்து ‘இலக்கின் இலக்கு’ என்னும் நூல் ஈழத்தமிழர்களின் ‘மக்கள் இறைமை’ வரலாற்று ரீதியாக இயல்பானது அதனை ஈழத்தமிழர் என்றுமே பேணி தங்களுக்கான மக்கள் நலத் திட்டங்களை வளர்க்க வேண்டும் என்ற ஈழத்தமிழர்களின் அரசியல் எதார்த்தத்தை அவர்களுக்கும் உலகிற்கும் மீள்நினைவுறுத்தும் செயற்பாடாக வெளிவருகிறது.
ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசின் இறைமையையும் வன்னிச் சிற்றரசின் இறைமையையும் ஈழத்தமிழர்களின் விருப்புப் பெறப்படாமலே பிரித்தானியக் காலனித்துவ அரசு 1833 இல் கோல்புறூக் கமரோன் அரசியல் அமைப்பின் மூலம் கண்டி, கோட்டே சிங்கள அரசுக்களின் இறைமையுடன் இணைத்து இலங்கை அரசு என்னும் காலனித்துவ கால அரசை உருவாக்கினர். ஆனால் இந்தக் காலனித்துவ அரசால் 115 ஆண்டுகளாக ஈழமக்களின் தனித்துவத்தையோ சிங்கள மக்களின் தனித்துவத்தையோ இலங்கையர் தேசியமாக ஒருமைப்படுத்தும் முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை.
இந்நிலையில் 04.02. 1948 இல் பிரித்தானிய காலனித்துவ அரசு தான் உருவாக்கிய இலங்கை என்னும் அரசுக்கு சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறையில் சுதந்திரம் வழங்கியது.
1944-45 இலேயே ஈழத்தமிழ் சமுக அரசியல் தலைவர்கள் பிரித்தானியக் காலனித்துவ அரசிடம் பிரித்தானியாவால் போர்த்துக்கேய டச்சுக்காலனித்துவ ஆட்சிகள் வழி சென்றடைந்த தங்களின் இறைமையின் அடிப்படையில் சிறுதேச இனங்களுக்கான தேசியத்தன்மையுடன் தன்னாட்சியை ஏற்படுத்துமாறு வலியுறுத்தினர்.
ஆனால் இலண்டனில் ஒதுக்கு நிதியாக இருந்த இலங்கையின் பெருந்தோட்ட விளை பொருள்களான தேயிலை கோப்பி கொக்கோ இரப்பர் விற்பனையால் கிடைத்த வருமானமான வைப்பை சிங்களத் தலைமைகள் விட்டுக் கொடுத்து ஈழத்தமிழர் தேசிய பிரச்சினையையோ பிரித்தானிய காலனித்துவ அரசே ஒப்பந்தத் தொழிலாளர்களாக இலங்கையில் குடியேற்றிய மலையகத் தமிழர் வாழ்வாதாரப் பிரச்சினையான குடியுரிமைப் பிரச்சினையையோ தீர்க்காமல் சிங்கள பௌத்த பேரினவாதத் தலைமைகளிடமே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பை ஒப்படைத்துச் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சிமுறையை இலங்கைத் தீவில் தோற்றுவித்தனர்.
இதனால் உருவாக்கப்பட்ட பாராளுமன்ற கொடுங்கோன்மை ஆட்சிதான் ஈழத்தமிழர்களினதும் மலையகத் தமிழர்களதும் தனிமனித மகிழ்ச்சியின்மைக்கான மூலகாரணியாக இன்று வரை தொடர்கிறது. இதனாலேயே ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை காலனித்துவத்தால் தீர்க்கப்படாத ஐக்கியநாடுகள் சபையால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக உள்ளது என ஈழத்தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகப் பார்க்கக் கூடிய வகையிலே உலக மகிழ்ச்சிநாள் இ;டம்பெற்ற இவ்வாரத்தில் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத் தொடரில் ‘ சுயாட்சி பெறாத தேசமாக ஈழத்தைப் பிரகடனப்படுத்தும்படியும், ஈழத்தமிழர்களுக்கான சிறப்புத் தூதரை ஐக்கியநாடுகள் சபை நியமிக்க வேண்டும் எனவும் இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தும்படியும்’ ஈழமக்களின் சமகாலக் குரலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈழத்தமிழரின் தனிமனித மகிழ்ச்சியைப் பாதிக்கக்கூடிய வகையில் இன்றும் ‘மதுருஓயா வலதுகரைத் திட்டம்’ என்ற பெயரில் ஈழத்தமிழினத்துடைப்பு நடைமுறைப்படுத்தப்படுவதையும், பௌத்தர்களே இல்லாத தமிழர் பகுதிகளில் சட்டவிரோதமாக பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் அமைத்து ஈழத்தமிழரின் இனப்பரம்பல் அடர்த்தி குறைக்கப்பட்டு சிங்களப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமாக அப்பகுதிகளை மாற்றும் முயற்சிகள் வேகப்படுத்ப்பட்டு வருவதையும் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் உலக மன்றத்தில் எடுத்துரைத்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களம் தமிழரின் தொன்மை மிகு சைவப்பகுதியான முல்லைத்தீவு வெடுக்குநாறி மலைப்பகுதியையே பௌத்த புனித பூமியெனப் பிரகடனப்படுத்தும் அளவுக்கு பண்பாட்டு இனஅழிப்பு உச்சமடைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் ஈழத்தமிழரின் இறைமையின் அடிப்படையில் ஈழத்தமிழரின் வெளியகத் தன்னாட்சி உரிமைக் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் ஏற்றாலே ஈழத்தமிழரின் இறைமை நடைமுறைச் சாத்தியமாகும் என்பது வெளிப்படையான உண்மையாகவுள்ளது.
மேலும் பிரித்தானிய காலனித்துவம் ஈழத்தமிழரின் அரசியலில் தோற்றுவித்த சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற கொடுங்கோன்மை ஆட்சியின் விளைவாகவே என்றுமே ஒற்றையாட்சியோ கூட்டாட்சியோ நிலவாத இலங்கைத் தீவில் மக்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்களாக உள்ள சிங்கள மக்கள் தங்களின் சிங்கள பௌத்த பேரினவாத இனவெறி மொழிவெறி மதவெறி மேலாண்மையை ஈழத்தமிழரின் யாழ்ப்பாண அரசினதோ வன்னிச் சிற்றரசினதோ பின்னணியில் தொடரும் இறைமையைக் கருத்தில் கொள்ளாது, இலங்கை முழுவதையும் எடுக்கையில் சிறுபான்மையினராக மக்கள் தொகையில் பிரித்தானியக் காலனித்துவத்தால் மாற்றப்பட்ட ஈழத்தமிழர்கள் மேல் நிறுவுவதற்காக ஈழத்தமிழர்களை இன அழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு என்னம் மூவகை அனைத்துலகக் குற்றச் செயல்களை சிஙிகள அரசின் கொள்கையாகவும் கோட்பாடாகவும் கொண்டு இன்று வரை தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றது.
இந்நிலையில் ஈழத்தமிழர்களின் இறைமையின் தொன்மையம் தொடர்ச்சியும் உலகமயப்படுத்தப்படாதவரை ஈழத்தமிழ் மக்களின் தனிமனித மகிழ்ச்சி என்பது நடைமுறைச் சாத்தியமில்லை என்பதே உலக மகிழ்ச்சி நாள் கொண்டாடப்படும் இவ்வாரத்தில் ஒவ்வொரு ஈழத்தமிழரும் தமிழகத் தமிழரும் மனதிருத்த வேண்டியவொன்றாக உள்ளது.
மேலும் இவ்வாண்டு உலக மகிழ்ச்சி அறிக்கை ஐந்து இயல்களைக் கொண்டதாக இவ்அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது இயலில் தேசிய மகிழ்ச்சியை அளவிடுவதற்கு ஒருமித்த கருத்து எது? தனியாட்களும் நிறுவனங்களும் எத்தகைய நடத்தையினைக் கொண்டிருக்க வேண்டும்? என்பது ஆராயப்பட்டுள்ளது. இரண்டாவது இயலில் கடந்த மூன்று ஆண்டுகளில் கோவிட் 19 மற்றும் நெருக்கடிகளில் எவ்வாறு நம்பிக்கையும் கொடையுள்ளமும் உயிர்களைக் காத்து மகிழ்ச்சிக்கு ஆதரவு அளித்தன என்பது எடுத்து விளக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது இயலில் அரசின் செயற்திறன் எவ்வாறு மனித மகிழ்ச்சியைப் பாதிக்கிறது? என்பது எடுத்து நோக்கப்பட்டுள்ளது? தனியாட்களின் பொதுநல நடத்தை எவ்வாறு அவர்களுடைய சொந்த மகிழ்ச்சியை வளப்படுத்திப் பயன்பெறுபவரினதும் கூட்டு மொத்தமாகச் சமுகத்தினதும் மகிழ்ச்சியையும் வளப்படுத்துகிறது? என்பது ஆய்வு செய்யப்படுகிறது. சமுகஊடகங்கள் எவ்வாறு நல்ல முறையில் மேலெழுகின்ற மகிழ்ச்சி மற்றும் துக்க நிலைகளை அளவிட உதவுகின்றன? என்பது மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றுக்கான விடைகளாக முதலாவது இயலில் மக்கள் தங்கள் வாழ்வில் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளனர் என்ற கேள்வி மக்களிடத்தில் நேரடியாகக் கேட்டுப் பதிலைப் பெற்று அதன் அடிப்படையில் அடுத்த பத்தாண்டுக்கான மகிழ்ச்சிக்கான செய்பணிநிரல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரிஸ்டோட்டில் ‘மனிதநல நல்லெண்ணத்துடன் மக்கள் நலத்தை உயர்வடையச் செய்வதே ஒருவருக்கு அவருடைய இன்பநலம் ஆக அமைய வேண்டும்’ எனப்பொருள்படும் ‘யூடிமோனியா’ (நுரனயiஅழnயை) என்னும் தத்துவத்தால் தனிமனித மகிழ்ச்சி மக்கள்நலப்பணியில் தங்கியுள்ளது என்பதை எடுத்துரைத்தார். இதனை மையப்படுத்தியே தனிமனித மகிழ்ச்சிக்கு மனித உரிமைகளைப் பேணலையும் பொதுமனித வாழ்வுக்கு மக்கள்நலத் திட்டங்களையும் அடுத்த பத்தாண்டுகளுக்கு முன்னெடுக்க ஐக்கியநாடுகள் சபை அழைக்கிறது.
புலம்பதிந்து வாழும் உலகத் தமிழர்களாகிய நாமும் ஈழமக்களின் மனித உரிமைகளைப் பேணும் முயற்சிகளிலும் ஈழமக்களுக்கான மக்கள்நலத் திட்டங்களை செயற்படுத்தவும் எதிர்வரும் பத்தாண்டுக்குமான திட்டங்களைத் தயாரித்துச் செயற்பட்டாலே தாயகத்திலும் புலத்திலும் உலகிலும் ஈழமக்களின் தனிமனித மகிழ்ச்சி சிறப்புறும்.
நாடுகளுக்கான மகிழ்ச்சி வகைமைப்பட்டியலில் இவ்வாண்டிலும் கடந்த ஆண்டு போலவே பின்லாந்து மகிழ்ச்சி நாடுகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாவதாக டென்மார்க்கும் மூன்றாவதாக அய்சுலாந்தும், நான்காவதாக இஸ்ரேயலும், ஐந்தாவதாக நெதர்லாந்தும் ஆறாவதாக சுவீடனும் ஏழாவதாக நோர்வேயும் எட்டாவதாக சுவிட்சர்லாந்தும் ஒன்பதாவதாக இலட்சம்பேர்க்கும் பத்தாவதாக நியூசிலாந்தும் பதினொராவதாக அவுசுதிரியாவும் பன்னிரெண்டாவதாக அவுசுதிரெலியாவும் பதின்மூன்றாவதாக கனடாவும் பதினான்காவதாக அயர்லாந்தும் பதினைந்தாவதாக அமெரிக்காவும் பதினாறாவதாக யேர்மனியும் பதினேழாவதாக பெல்சியமும் பதினெட்டாவதாக செச்சியாவும் பதினொன்பதாவதாக பிரித்தானியாவும் இருபதாவதாக லித்தூனியாவும் வகைமை பெற்றுள்ளன.
சிறிலங்கா 112 வது இடத்திலும் பாக்கிஸ்தான் 108 வது இடத்திலும் இந்தியா 126வது இடத்திலும் மியன்மார் 117 பங்களாதேசு 118 யப்பான் 47வது இடத்திலும் சீனா 64வது இடத்திலும் சிங்கப்பூர் 25வது இடத்திலும் இவ்வாண்டு வகைமை பெற்றுள்ளன.
இறுதியாக மகிழ்ச்சியான மனநிலையை எந்தச் சூழலிலும் மீளவும் உருவாக்குதன் வழியாகவே புதிய மாற்றங்களையும் புதிய எழுச்சிகளையும் பெற முடியும். ஏனெனில் மகிழ்ச்சி என்பதே சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக விடுதலையை முன்னெடுப்பதற்கான உளஉடல் ஆற்றலைத் தரும் சக்தி. ஆகவே மகிழ்ச்சியை மீளவும் மனநிலையாக்க எந்த வலியும் துன்பமாக மாறுவதை அனுமதிக்கக்கூடாது. வலியைக் கடப்பதற்கு எதனைச் செய்ய வேண்டுமோ அதனை ஒற்றுமையுடனும் ஒருங்கிணைவுடனும் உறுதியுடன் செய்ய வேண்டும். இறைமையுடன் வலிகடந்து எழுவோம். வுலிகள் இனி துன்பமாகாது எந்நாளும் காப்போம்!
மூத்த ஊடகவியலாளர் ஆசிரியர் சூ.யோ. பற்றிமாகரன்