
மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசு விவகாரம் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
மன்னார் – பட்டித்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், இடம்பெற்ற துயரச்சம்பவம் தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்துகொண்டார்.
அத்தோடு மன்னார் மாவட்ட செயலாளருக்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி இந்த விடயத்தின் நிலைதொடர்பிலும் கேட்டறிந்ததுடன், இந்த விடயத்தில் கூடுதல் கவனஞ்செலுத்தப்பட்டு நீதியைப்பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார்.



