மனித புதைகுழி எச்சங்களை பகுப்பாய்வுக்கு தெரிவு செய்ய மன்னார் நீதிமன்றம் அனுமதி

அமெரிக்கா புளோரிடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக கொண்டு செல்வதற்கு மனித புதைகுழி எச்சங்களை அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் பகுப்பாய்வுக்கு தெரிவு செய்ய அனுமதிப்பதற்கான விண்ணப்பத்தில் மன்னார் நீதிமன்றம் நீதவான் கையொப்பம் இட்டுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு நேற்று (24) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் அப்துல் சமட் கிப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜராகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் இவ் வழக்கு தொடர்பாக தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட  நீதவான்  நீதிமன்றத்தில் திருக்கேதீஸ்வரத்தின் மனித புதைகுழி வழக்கு இல. பி768 – 2013 ஆம் ஆண்டுக்கான வழக்கு நீதவான் அப்துல் சமட் கிப்துல்லா முன்னிலையில் விசாரனைக்காக நேற்று வியாழக்கிழமை எடுக்கப்பட்டபோது இவ் வழக்கில் ஏற்கனவே கட்டளை விடுக்கப்பட்டிருந்தது.

அதாவது மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மனித புதைகுழியிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் ஏற்கனவே அனுராதபுரம் வைத்தியசாலையில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.

இதன் எச்சங்களின் மாதிரிகளை எடுத்து சீ 14 காபன் பரிசோதனைக்கு அமெரிக்கா புளோரிடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக கொண்டு செல்வதற்கு மாதிரி தெரிவு செய்வதற்கான கட்டளை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வழக்கு தொடுனர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைவாக கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்து மாதிரிகளை தெரிவு செய்வதற்கான நடைமுறைகளை அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் மேற்பார்வை செய்து அதற்கான மாதிரிகளை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன் பாரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அரச தரப்பினரால் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதாவது இதற்கான அனுமதியை  நீதிபதி  வழங்க வேண்டும் என்று  கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கமைய இதன் அனுமதிக்கான விண்ணப்பத்தில் நீதவான் கையொப்பம் இட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் அரச தரப்பு சட்டதரணிகளால் மார்கழி மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பணம் ஒன்று சமர்பிக்கப்பட இருக்கின்றது.

அத்தோடு இவ் வழக்கானது இதன் நடவடிக்கைக்காக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 9 ஆம்  திகதி மீண்டும் அழைக்கப்பட இருக்கின்றது என்றார்.