வடகிழக்கு மாநிலங்களிலிருந்துசென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் முதுகலை பட்டபடிப்பினை மேற்கொண்டார்கள்.
1986 -2006 ஆம் ஆண்டுகளில் நான் பேராசிரியராக-துறைத் தலைவராகப் பணியாற்றிய போது அஸ்ஸாம், மிசோரம், திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து ஆகிய பகுதிகளிலிருந்து மாணவர்கள் வருவதை ஊக்குவித்தேன்.
மிகவும் பண்பாகவும், அன்பைச் செலுத்தி ஆசிரியர்களை மதிக்கும் தகைமையை அம்மாணவர்கள் பெற்றிருந்தனர். மணிப்பூர் மாநிலத்தின் குக்கி- மெய்தி இன மாணவ மாணவிகள் ஒற்றுமையோடு கல்வி பயின்றார்கள்.
ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வந்த இந்தியன் வானூர்தியில் விடுமுறையில் செல்வதற்குக் கட்டணச் சலுகையைப் பெறுவதற்கு விண்ணப்பத்தில் கையொப்பம் பெறுவதற்கு வரும் மாணவர்கள் எங்கள் நாட்டிற்குச் சென்று இந்தியா திரும்புவதற்கு உதவியதற்கு நன்றி என்று தான் குறிப்பிடுவார்கள். எனக்கு இத்தகைய சொல்லாடல் அதிர்ச்சி தரும் வியப்பாக இருந்தது. எனக்கு இதற்கான பதில் 2000 ஆம் ஆண்டு புதுதில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையில் கிடைத்தது.
வரலாற்றுத் துறையில் ஆய்வினை முடித்து, முனைவர் பட்டம் பெற்று, தனது. ஆய்வுக் கட்டுரையை மாலேம் நிங்தோஜா Freedom from India -A History of Manipur Nationalism 1947-2000 (Malem Ningthouja) என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். இந்நூலைப் புதுதில்லி அலைக்கற்றை பதிப்பகம் வெளியிட்டுள்ளது . நான் பெற்ற செல்வம் என்பது எனது மாணவர்கள் காட்டும் பேரன்பு தான். புதுதில்லியில் உயர் அலுவலராகப் பணியாற்றும் அன்பு மாணவர் பழனியப்பன் (#M. Palaniappan )உடனடியாக நான் கேட்டவுடன் நூலை வாங்கி அனுப்பினார். இன்றும் பல நூல்களை அனுப்புகிறார்.
அந்த நூலைப் படித்தவுடன் மறைந்த ஐயா ஆனைமுத்து ஆசிரியராக இருந்த சிந்தனையாளன் ஏட்டில் “மணிப்பூர் ஒரு மாநிலமா? அல்லது நாடா?” என்ற
தலைப்பில் ஒரு கட்டுரையை 13 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். அக்கட்டுரையில் ஆய்வாளர் மாலேம் நிங்தோஜா குறிப்பிட்ட சில முதன்மையான கருத்துக்களை இணைத்திருந்தேன்.”தொடர்ந்து மணிப்பூரில் தங்களின் உரிமைகளுக்காகக் களம் அமைத்து மக்கள் போராடி வருகின்றனர்.”
“1891- ஆம் ஆண்டு பிரித்தானிய பேராதிக்க அரசு மணிப்பூரை ஆட்சி செய்த இளவரசர் கோயர்ங்கிடம் தங்களின் உலக ஆதிக்கத்தைக் காட்டி அடிபணிய வலியுறுத்தியது. இராணுவத்தைக் கொண்டு தாக்கியது. அரசர் மாளிகையை முற்றுகையிடப்பட்டது. மணிப்பூர் வீரர்கள் பிரித்தானிய இராணுவத்தைப் படுதோல்வி அடைய செய்தனர். 5 பிரித்தானிய இராணுவத்தினர் மரணம் அடைந்தார்கள். பிரித்தானிய உயர் அலுவலர்களைக்குற்றவாளி என அறிவித்தது.
மணிப்பூர் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது. உயர் அலுவலர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.இதற்குப் பிறகு தான் பிரித்தானிய அரசு தங்களின் இராணுவ வலிமையால் பொம்மை அரசுகளை உருவாக்கி அம்மண்ணின் வளங்களைச் சூறையாடினர்.
1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்ற பிறகும் காலனி ஆதிக்க கொள்கையே ஒன்றிய அரசு பின்பற்றியது. மணிப்பூரின் கபோ பள்ளத்தாக்கை பர்மாவுடன் இணைப்பதற்கு பிரித்தானிய அரசு முயன்றது. மணிப்பூர் மன்னனின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்த மன்னர் கம்பீர் அதிர்ச்சி உற்று மாரடைப்பால் இறந்தார்.
மணிப்பூர் மக்கள் களம் கண்டனர். பர்மா அரசு பணிந்தது. கபோ பள்ளத்தாக்கு பகுதிக்கான உரிமைத் தொகையை பர்மா மணிப்பூர் அரசிற்கு 1949 ஆம் ஆண்டு வரை செலுத்தியது. ஆனால் இந்திய ஒன்றிய அரசு உரிமைத் தொகைக்கூட பெறாமல் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததைப்போல பர்மாவிற்கு கபோ பள்ளத்தாக்கை விட்டுக் கொடுத்து விட்டது.
மணிப்பூரின் முதல் கம்யூனிஸ்டு தலைவரான இராபட் பெண்கள் படையை உருவாக்கி களம் அமைத்தார். பன்முக ஆளுமையான இராபட் மார்க்ஸ், லெனின் ஆகியோரின் புரட்சிக் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார். பிரித்தானிய அரசு போன்றே முதலாளிகள் நலனிற்காகவே ஒன்றிய அரசு துணை நிற்கிறது. மார்வாடி, டாடா , மும்பாய், குஜராத் முதலாளிகளை மணிப்பூர் வளங்களைச் சுரண்டல் செய்ய ஒன்றிய அரசு முற்படுகிறது.
மணிப்பூர் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கிறது. உரிமைகளை ஒடுக்குகிறது என்று முழக்கம் செய்தார் தோழர் என்று மணிப்பூர் மக்களால் அன்புடன் போற்றப்பட்ட இராபட். மணிப்பூர் மக்கள் விழிப்புணர்வு பெற்று தங்களின் மொழி, பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்க முற்பட்டனர். தாய் மொழிக் கல்வி ஊக்குவிக்கப்பட்டது.இந்தி மொழி அகற்றப்பட்டது.
சமஸ்கிருத மொழி அடையாளங்கள் அகற்றப்பட்டன. மணிப்பூர் மொழியிலேயே பிறந்த குழந்தைகளுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டன. ஆனால் விடுதலைப் பெற்ற இந்தியாவிலும் மணிப்பூர் மக்கள் மீது இராணுவ அடக்குமுறை பின்பற்றப்படுகிறது. பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். இதனால் மாநில சுயாட்சி முறையைக் கூட மணிப்பூர் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.எனவே மணிப்பூர் முழு உரிமையை ஒன்றிய அரசு வழங்கவேண்டும் என்று மாலேம் நிங்தோஜா குறிப்பிட்டுள்ளார்.மேலும் மாலேம் நிங்தோஜா மூன்று கருத்துக்களைத் தனது நூலில் அழுத்தமாகப் பதிவிட்டுள்ளார்.இன்றைய சூழலில் இந்திய நாடு என்பது நிரந்தரமாக இருக்குமா என்று நான் ஐயுறுகிறேன்.
காலப்போக்கில் அதனுடைய உட்கூறுகள் பிரிந்து நாட்டினுடைய அமைப்புத் தன்மை படிப்படியாக அழிந்து விடும். ( I doubt that a nation that exists today is a permanent entity. It may lose number of its components and become gradually extinct. Page -283.)”இந்தியா ஒரு போராடும் களமாக இருக்கிறது.பலர் நினைப்பது போன்றோ, இந்திய அரசு உரிமை கொண்டாடுகிற தன்மையிலோ இந்தியா ஒரு நாடன்று.காரணம், நாடு என்கிற உருவாவதற்கான இயற்கையான காரணங்கள் இங்கு இல்லை.இந்தியா என்ற ஒரு புவி அமைப்பு கருத்தொற்றுமையிலும்,படை பலத்தாலும் அரசால் உருவாக்கப்பட்ட து.”
“எனவே இந்தியாவில் பின்பற்றப்படுகிற ஒருமைப்பாடு, தேசியம் என்பதெல்லாம் அதிகாரவர்க்கம் மக்களை ஒடுக்கித் திணிக்கப்பட்ட தேசியம் (Official Nationalism) என்று ஆய்வாளர் மாலேம் நிங்தோஜா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எவ்வளவு எச்சரிக்கையோடு எவ்வளவு கவனத்தோடு எவ்வளவு பொறுப்புணர்வோடு எதிர்கொள்ள வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் ஆய்வாளரால் அக்கறையோடு எழுதப்பட்ட கருத்துக்களை முற்றிலுமாக இன்றைய பாஜக ஆட்சியாளர்கள் புறந்தள்ளி, எரிகிற தீயில் இந்துத்துவா எண்ணெயை ஊற்றி அல்லவா
இருக்கிருகிறார்கள். உலகமே இந்தியா ஒரு ஜனநாயக நாடா என்று கேள்வியை எழுப்புகிறது. பெண்கள் கற்பழிப்பு நிகழ்வு சமூக ஊடகங்களில் வெளிவந்த பிறகு, காலதாமதம் ஏற்பட்ட போதிலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட உடனடியாக ஒன்றிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார்.ஆனால் பிரதமர் நரேந்திரர் ஊர் எறிகிற போது உலகம் சுற்றி வருகிறார்.
மணிப்பூர் எரிகிறது. குருதி கொதிக்கிறது.
வள்ளலார் கூற்றுப்படி,
கருணையிலா இல்லா ஆட்சி
கட்டி ஒழிந்தால்தான் தீர்வு கிடைக்குமோ!