மனித உரிமை மீறல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும்  மனித உரிமை மீறலே -மட்டு.நகரான்

இலங்கையில் சிறுபான்மையினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையேற்பட்டுள்ளதா என்ற கேள்வியை இன்றுள்ள சர்வதேச நாடுகள் ஏன் ஆராயாமல் உள்ளது என்பது கேள்வியாகவே இருந்துவருகின்றது.

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் ஒரு தனி மனிதனின் உரிமையை பறிப்பது மட்டும் மனித உரிமை மீறல் அல்ல.ஒரு இனத்தின் அடிப்படை உரிமைகளை மீறுவதும் உரிமை மீறலாகவே கொள்ளவேண்டியுள்ளது.

சர்வதேச மனித உரிமை தினத்தில் எங்காவது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றால் அது தொடர்பில் கண்காணித்து அதற்கு எதிராக குரல்கொடுக்கவேண்டிய தார்மீக கடமை மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளுக்கும் அதன் முக்கியத்துதவத்தினை வெளிப்படுத்தும் நாடுகளுக்கும் உள்ளது.

இலங்கையினை பொறுத்த வரையில் கடந்த 75வருடத்திற்கும் மேலாக இலங்கையில் தமிழர்களுக்கும் எதிராகவும் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினங்களுக்கு எதிராகவும் பெரும்பான்மையினத்தவர்களின் முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்பட்டுவரும் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் வெறும் எழுத்திலும் அறிக்கையிலுமே காட்டுகின்றதே தவிர செயற்பாடுகளில் இதுவரையில் எந்தவித தீர்மானத்தையும் அமுல்படுத்தாத நிலையென்பது சிறுபான்மை சமூகத்திற்கு மனித உரிமை தொடர்பான செயற்பாடுகள் மீது நம்பிக்கையற்ற நிலைமையினையே ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் வடக்கு கிழக்கினைப்பொறுத்தவரையில் தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தினால் நசுக்கப்படும்போது அதில் இருந்து கிளம்பிய நெருப்பு தணல்களாக பல்வேறு போராட்டங்கள் வடக்கு கிழக்கில் வெடித்தன.

உணர்வுகளை அடக்கும்போது அது அகிம்சை வழி போராட்டங்களாகவும் ஆயுதம் தாங்கிய போராட்டங்களாகவும் இரு கட்டங்களாக தமிழர்களின் உணர்வுவெளிப்பாடு சர்வதேசம் வரையில் இன்று நீதி கேட்குமளவுக்கு கொண்டுசென்றுள்ளது.

தமிழர்களின் அகிம்சை போராட்டம் பெரும்பான்மையினத்தினால் நசுக்கப்படும்போது சர்வதேச சமூகம் தலையிட்டு அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுத்திருந்தால் இன்று வடக்கு கிழக்கில் ஆயுதப்போராட்டம் ஏற்பட்டு இவ்வளவு சீரழிவுகள் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது.

ஒரு நாட்டில் ஒரு இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும் ஒரு வகையான மனித உரிமை மீறலாகவே கொள்ளப்படவேண்டும்.

வடக்கு கிழக்கில் தமிழர்கள் தமது சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்கான உரிமை உள்ளது.அவர்களின் பூர்வீக நிலங்களில் தமக்கான நிலைமையினை ஏற்படுத்துவதற்கான சகல உரித்துகளும் அவர்களுக்கு உள்ளது.ஆனால் காலத்திற்கு காலம் அவர்களது நிலங்களை அபகரித்து தமது பெரும்பான்மை சமூகத்தினை அங்கு அத்துமீறிய வகையிலான குடியேற்றங்களை செய்ய முனைவது பாரியளவிலான மனித உரிமை மீறலான செயற்பாடுகளாகவே காணப்படுகின்றது.இந்த செயற்பாடுகளை காலம்காலமாக சிங்கள அரசுகள் முன்னெடுத்துவருகின்றபோதிலும் அதனை தடுத்து நிறுத்துவதற்கான எந்த செயற்பாடுகளையும் மனித உரிமைகள் பற்றி பேசும் சர்வதேச நாடுகள் செய்ததில்லை.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்ட வகையில் தமிழ் பேசும் மக்களின் காணிகளை அபகரித்து அங்கு சிங்கள குடியேற்றங்களை செய்வதற்கு இன்றைய அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை எந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

அண்மையில் மட்டக்களப்பில் கிரான் பிரதேசத்தில் விவசாயிகள்,பொது அமைப்புகள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்-முஸ்லிம் மக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள பேரினவாதத்தின் பிரித்தாளும் தந்திரோபாயத்தினை மீறி தமிழ் பேசும் மக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது ஒரு பலமான விடயமாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகாவலி பி வலயத்தின் வலது கரையில் உள்ள காணிகளை அபகரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் இனவிகிதாசாரத்தினை மாற்றும் முழுமையான திட்டமிட்ட செயற்பாடு என விவசாயிகள் இதன்போது தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்துடன் தான் அம்பாறை மாவட்டம் அந்த காலங்களில் சுதந்திரத்திற்கு முன் (1948) இருந்தது அதனடிப்படையில் 10,000 சதுர கிலோ மீற்றராக மட்டக்களப்பு மாவட்டம் காணப்பட்டது. ஆனால் கல்லோயா திட்டத்தை அறிமுகபடுத்தி அம்பாறையை  தனி மாவட்டம் ஆக்கியதன் மூலம்  4500 சதுர கிலோ மீற்றர் நிலம் தற்போது அம்பாறையுடன் இணைக்கப்பட்டது.

ஏனைய பகுதியான  நிலப்பரப்பு ஏற்கனவே எல்லையாக இருந்த மட்டக்களப்பு சந்தி தற்போது சுருக்கி  றிதிதன்னை எல்லையாக மாற்றபட்டதன் காரணமாக பெருமளவு காணியானது பொலநறுவையுடன் இணைக்கப்பட்டது. இறுதியாக கிடைத்த தகவலின் படி (2017) நிலப்பரப்பு 2854 சதுர கிலோமீற்றராக ஆக மட்டக்களப்பு மாவட்டம் சுருக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த திட்டமே மகாவலி டீ வலயம் என்ற போர்வையில் கிரான் பிரதேசத்தில் 43,436 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்றது.

மகாவலி பி வலய பிரதேசத்தில் ஏராளமான தமிழ் முஸ்லிம் மக்களுக்கு காணிகள் உண்டு. அவர்களுடைய ஆவணங்களும் யுத்தத்தால் அழிந்துவிட்டது. பிரதேச செயலகங்களிலும் பல ஆவணங்கள் காணாமல் போயுள்ளது. அதனால் அவர்களுடைய காணிகளுக்கு அவர்கள் சொந்தக்காரர் அல்ல என்ற முடிவுக்கு யாரும் வர முடியாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் பூரண விசாரணை செய்து  உண்மையைக் கண்டறிந்து அவர்களுக்கு அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அக் காணிகள் வழங்கப்பட வேண்டும். காணி அமைச்சின் சுற்றிநிருபம் இலக்கம் 10 திகதி 15/ 6/ 1995   இன் படி அரச காணியை 15/6/1995 க்கு பின் யாரும் அடாத்துச் செய்ய முடியாது.

இப் பிரதேசத்தில் வந்த சிங்கள மக்கள் இத் திகதிக்கு பின்னர் தான் காணிகளை அடாத்து செய்துள்ளனர்.இப்பகுதியில் திட்டமிட்ட குடியேற்றங்களை சிங்கள அரசுகள் முன்னெடுத்துவந்த நிலையில் தற்போது பாரியளவிலான திட்டமிடலை முன்னெடுத்துவருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மகாவலி பி வலயத்தில் காணிகளை அபகரித்து அங்கு சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்களை சோளம் செய்கை,கரும்பு செய்கை என்ற ரீதியில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொழிலற்ற நிலையில் உள்ளபோது வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களை கொண்டுவந்து குடியேற்ற நினைப்பது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே சிங்கள பிரதிநிதிகள் அற்ற மாவட்டமாகவுள்ள நிலையில் இங்கும் சிங்கள பிரதிநிதியொருவரை கொண்டுவரவேண்டும் என்பதற்கான திட்டமே.உலக அளவில் மனித உரிமைகள் பற்றி பேசுவோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மனித உரிமை மீறலையும் பேசவேண்டும்.

இது இந்த நாட்டில் சிங்கள அரசுகளினால் வெளிப்படையாகவே சிறுபான்மையினத்தின் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான அத்துமீறல்களை இந்த மனித உரிமைகள் தின நாளிலாவது சர்வதேச சமூகம் பேசுவதற்கு முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

இலங்கையின் அரசியலமைப்பின் 13 வது திருத்த  சட்டம் shedule 9 Rule 01 Apantice Two (2) item 18 உறுப்புரை 2.5 மாகாணங்களுக்கு இடைப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களில் (உதாரணமாக மாகாவலி) போன்ற இடங்களில் காணி இலங்கையில் விகிதாசாரப்படி வழங்கப்பட வேண்டும்.ஆனால் இலங்கையில் உள்ள சட்ட அடிப்படைகளையும் மீறியே காணிகள் பகிரப்பட்டுள்ளன.

அதாவது இலங்கையின் சனத்தொகையில் சிங்களவர் 76 வீதம்,வடகிழக்கு தமிழ் 12 வீதம்,முஸ்லிம் 8 வீதம் ,மலைநாட்டு தமிழ் 4 வீதம் உள்ள நிலையில் இந்த காணி பங்கீடுகள் பெரும்பான்மையின்தை மட்டுமே நோக்காக கொண்டு காணிகள் பகிரப்பட்டுள்ளன.

இதுவரையில் மகாவலி 10 திட்டங்கள் ஊடாக சிங்களம் 96.16 வீதம்  (123,630 ) குடும்பங்கள்,தமிழ் 1.42மூ (1,835) குடும்பங்கள், முஸ்லிம் 2. 39 வீதம்(3,068) குடும்பங்கள்,ஏனையவர்கள் (பறங்கியர்) 0.03 வீதம் (44) குடும்பங்களுக்கே காணி வழங்கப்பட்டுள்ளன.இந்த திட்டங்கள் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் இனப்பரம்பல் முற்றாக மாற்றியமைக்கப்பட்டன.தமிழர்களின் விகிதாசாரம் திட்டமிட்டு மாற்றப்பட்டது.இங்கு காணி வழங்கலில் சட்டம் பின்பற்றப்படவில்லை. இவ்வாறான தொடர்ச்சியான மீறல்கள் தமிழர்களை வலுவிழக்கச்செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டன, முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவை தொடர்பில் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க இந்த மனித உரிமைகள் தினத்தில் உறுதிகொள்ளவேண்டும் என்ற அழைப்பினை விடுக்கின்றோம்.