‘ட்ரைடென்ட் கெம்பார்’ (Trident Chemphar) நிறுவனத்துடனான நிலக்கரி கொள்வனவு ஒப்பந்தத்தின் போது இடம்பெற்ற பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் சட்ட விதிமீறல்கள் காரணமாக நாட்டுக்கு 2.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில், அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்தில் இடம்பெற்ற தன்னிச்சையான தீர்மானங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொள்வனவுச் செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் பாரியளவில் மீறப்பட்டுள்ளதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சட்டமா அதிபரின் உத்தியோகபூர்வ அனுமதி 2025 நவம்பர் 20ஆம் திகதி வழங்கப்படவிருந்த நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவசர அவசரமாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சந்தர்ப்பத்தில், குறித்த ‘ட்ரைடென்ட் கெம்பார்’ நிறுவனம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்ற சட்ட மீறலையும் கணக்காய்வாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
விநியோகிக்கப்பட்ட நிலக்கரி தரம் குறைந்ததாக இருந்தமையால், மின் உற்பத்தி மற்றும் பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஒன்பது வெவ்வேறு கப்பல் சரக்குகள் மூலம் ஏற்பட்ட மொத்த நட்டம் இரண்டாயிரத்து 237.70 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்திடமிருந்து அறவிடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலையீடுகள் இன்றி, வெளிப்படையான முறையில் எதிர்காலக் கொள்வனவுகளை முன்னெடுக்கக் கணக்காய்வாளர் நாயகம் சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார். விநியோகஸ்தர்களின் தகைமை மற்றும் நிதி வலுவைச் சோதிக்க முறையான மற்றும் வெளிப்படையான பதிவு முறையை உருவாக்குதல் வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கரியின் தரத்தை எவ்விதத் தார்ப்பரியமுமின்றிச் சரிபார்க்க நுரைச்சோலை மின்நிலையத்தில் ஒரு சுயாதீனக் கட்டுப்பாட்டுப் பிரிவை நிறுவுதல். அனைத்து அரச ஒப்பந்தங்களும் சட்டமா அதிபரின் இறுதி அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே கையெழுத்திடப்படுவதை உறுதி செய்தல் போன்ற பரிந்துரைகளையும் கணக்காய்வாளர் நாயகம் முன்வைத்துள்ளார்.



