உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-பகிரங்க மன்னிப்பு கோரிய மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்  தொடர்பில் அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் முறையாக இன்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கோரினார்.

2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும்   தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குமாறும் இலங்கை உயர் நீதிமன்றம் கடந்த 12ம் திகதி உத்தரவொன்றை பிறப்பித்தது.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அத்துடன், முன்னாள் பொலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபா விதமும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் 10 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு செலுத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டை தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த இழப்பீட்டை தொகையிலிருந்து, தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் தலா ஒரு மில்லியன் ரூபா வீதமும், தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் 5 இலட்சம் ரூபா வீதமும் இழப்பீட்டை வழங்குமாறும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்நிலையில்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் உடல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

”நான் அறிந்த விதத்தில் கத்தோலிக்க மக்கள், என்மீது வைராக்கியமோ, குரோதமோ வைக்கவில்லை. எனது ஆட்சிக் காலத்தில் வேறு நபர்களினால் செய்யப்பட்ட தவறு காரணமாக இன்று எனக்கு இழப்பீட்டை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எமது ஆட்சிக் காலத்தில், இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றமை குறித்து உயிரிழந்த மக்கள், அங்கங்களை இழந்து, ஓரிடத்தில் முடங்கியுள்ள மக்களிடமும், இறைவனிடமும் விசேடமாக மன்னிப்பு கோருகின்றேன்.

அதேபோன்று, நான் எந்தவொரு விடயமும் அறியாமல், இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இவ்வாறு உயிர்கள் காவுக் கொள்ளப்பட்டமை தொடர்பில் கத்தோலிக்க மக்களிடமும் நான் மன்னிப்பு கோருகின்றேன்.

நான் தவறிழைத்ததாக இந்த தீர்ப்பில் கூறப்படவில்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஏதேனும் பாரிய குற்றங்களை இழைத்திருப்பார்களாயின், அந்த குற்றத்திற்கு ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என மிகவும் தெளிவாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோரிய அடுத்த நிமிடமே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளமை  என்பது குறிப்பிடத்தக்கது.