“மாவீரர் தியாகத்தால் தான் தமிழ் இனத்தின் நிலைநிறுத்தம் சாத்தியமானது” – தவிசாளர் தியாகராஜா நிரோஸ்

மாவீரர்களின் தியாகத்தினாலேயே தமிழ் மக்களின் இருப்பு தக்கவைக்கப்பட்டது என்று வலிகாமம் கிழக்கு பிரேதச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
வலிகாமம் கிழக்கு பிரேதச சபையில் நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ் மக்கள் இந்நாட்டின் தேசிய இனமாக மரபுவழித் தாயகத்தில் வாழ்வதற்கான உரிமையினை இலங்கை அரசு மறுத்தது.
மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது பௌத்த சிங்கள பேரினவாதத்தினை கட்டவிழ்த்து விட்டபோது தமிழ்த் தலைவர்கள் ஜனநாயக ரீதியில் அவர்கள் அடக்குமுறைக்கு எதிராகப் போராடினார்கள்.
தமிழ்த் தலைவர்கள் ஜனநாயக அடிப்படையில் போராடியபோது அப்போராட்டம் அரச படைகளால் ஆயுத வன்முறை ஊடாக அடக்கப்பட்டது.
இந்நிலையிலேயே ஆயுத வழியிலான விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்று தமிழ் மக்களுக்கு என ஒரு தேசத்தினையும் தனியரசையும் இந்த உலகில் உருவாக்கவேண்டும் எனப் போராடி மகோன்னத தியாகத்தினை ஈடேற்றியவர்களாக மாவீரர்கள் மீளாத்துயில் கொள்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
அவர்கள் இந்தத் தேசத்தில் தமிழ் மக்கள் விடுதலை அடையவேண்டும் என்பதற்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தியாகசீலர்களாக உள்ளனர்.
மாவீரர்களின் தியாகம் அவர்களை தெய்வங்கள் என்ற ஸ்தானத்திற்கு முன்னகர்த்தியுள்ளது.
விடுதலைப் போராட்டம் அதன் தியாகங்கள் வாயிலாக தமிழ் மக்களின் இருப்பினை இந்தத் தேசத்தில் பாதுகாத்துள்ளது.  சர்வதேசமயப்படுத்தியுள்ளது என்று வலிகாமம் கிழக்கு பிரேதச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
‘தியாகங்களே எம்மை இலட்சியத்தினால் ஒன்றுபடுத்துகின்றது. நாம் இன்றும் எமது உரிமைகளை ஜனநாயக ரீதியில் வென்றெடுப்பதற்கு மாவீரர்கள் மீது உறுதியுரைத்து இலட்சியத்தினால் ஒன்றுபட்டவர்களாக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்’ என்றும் வலிகாமம் கிழக்கு பிரேதச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.