வானிலை மோசமானபோதும் உற்சாகமாக நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

மாவீரர் நாளான இன்று (27) வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
ஈகை சுடரேற்றப்பட்டும் மலர் தூவியும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
மாலை 6.05க்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்பட்டது.
இலங்கை முழுவதும் சீரற்ற வானிலை நிலவுகின்ற போதிலும் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
அதேநேரம், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனுக்கு ஈகைச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை முன்னாள் நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியிலும், மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்திலும் சுடர் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தின் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவ முகாம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி பொன் சிவகுமாரனின் உரும்பிராயில் உள்ள நினைவுத் தூபிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது‌.
சாவகச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவிடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, மாவீரர் நாளை முன்னிட்டு இன்று (27) பிற்பகல் 2 மணியுடன் தெல்லிப்பழையில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன.
இதன்படி, இன்று வலி வடக்கிற்கு உட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் பிரதேசசபைத் தீர்மானத்திற்கு அமைய மூடப்பட்டன.
இதேவேளை மாவீரர்களுக்கு இன்று பாராளுமன்ற வளாகத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றது.
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் சண்முகம் குகதாசன் ஆகியோர் பாராளுமன்றத்தில் நினைவேந்தலை நடத்தினர்.