மாவீரர் நாளில் தன்னாட்சி எழுச்சி கொண்டெழுந்தனர் இறைமையுள்ள ஈழத்தமிழர் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 367

ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினையென்பது ஈழத்தமிழரின் இறைமையும் தன்னாதிக்கமுள்ள யாழ்ப்பாண – வன்னி அரசுக்களைக் கைப்பற்றித் தங்கள் வசமாக்கிய ஈழத்தமிழரின் இறைமையைக் காலனித்துவ பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து மீட்பதற்கு 115 ஆண்டுகள் போராடி வந்த ஈழத்தமிழர்களிடம் அதனை ஒப்படைக்காது காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக அனைத்துலக நாடுகளாலும் அமைப்புக்களாலும் தீர்க்கப்பட வேண்டிய அனைத்துலகப் பிரச்சினையாக 04.02.1948 இல் காலனித்துவப் பிரித்தானியாவே உருவாக்கிய  ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக் குள் ஈழத்தமிழர்களின் இறைமையையும்  உள்ளடக்கியதால் 77 ஆண்டுகளாகத் தொடரும் சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்க ளின் ஈழத்தமிழர்கள் மேலான ஈழத்தமிழின அழிப்பு அரசியல் கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் ஈழத்தமிழர்கள் தங்களின் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தித் தங்களின் பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளரச்சிகளையும் அடைய இயலாது தொடர்ந்து இனஅழிப்புக்கு உள்ளாகி வருதல் என்பதாகும்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கைத் தீவில் வாழ்ந்து வரும் தேசஇனமான ஈழத்தமிழர்கள் தாங்கள் பிரித்தானிய காலனித்துவத்திடம் இழந்த இறைமையை மீளப்பெறுவதற்காகவே அவ்வாறு தங்கள் இறைமையையும் இழந்த இலங்கைத் தீவின் மற்றொரு  தேச இனமான சிங்களவர் களையும் இணைத்து பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராடினர். ஆனால் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் உருவாக்கிய சோல்பரி அரசியலமைப்பு ஈழத்தமிழர்களின் இறைமையை மீளவும் அவர்களிடம் நேரடியாகக் கையளிக்காது மதத்திற்கோ இனத்திற்கோ எதிரான சட்டங்களைச் சிலோன் பாராளுமன்றம் இயற்றினால் பிரித்தானிய பிரிவிக்கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்து நீதி பெறலாமெனப் பிரித்தானிய முடிக்குரியவரையே ஈழத்தமிழர்களின் மீயுயர் இறைமையாளராகத் தொடர அரசியலமைப்பு உறுதியளிக்கும் சோல்பரி அரசியலமைப்பின் 29(2) பிரிவினைச் சிறுபான்மையினர்க்கான அரசியலமைப்புப் பாதுகாப்பாகக் கட்டமைத்துச் சுதந்திரத்தை சிலோனுக்கு வழங்கினர்.
04.02.1948 முதல் 22.05. 1972 வரை 24 ஆண்டுகள் ஈழத்தமிழர்கள் தாங்கள் பிரித்தானிய காலனித்துவ அரசிடம் இழந்த அரசியல் உரிமைகளை நவகாலனித்துவ அரசாகப் பிரித்தானிய அரசால் உருவாக்கப்பட்ட சிலோன் அரசாங்கத்திடம் இருந்து மீளப்பெறச் சகல சனநாயக வழிகளிலும் முயன்றும் இயலாத நிலையிலே 22.05. 1972இல் சிங்கள அரசாங்கம் சோல்பரி அரசியல் அமைப்பை வன்முறைப்படுத்தி கோடீஸ்வரன் வழக்கில் பிரித்தானியப் பிரிவுக் கவுன்சில் அளித்த தீர்ப்புக்குக் கட்டுப்பட மறுத்து அரசியலமைப்புச் சட்டத்திற்கும் நீதிமன்றச் சட்டத்திற்கும் எதிரான அனைத்துலகச் சட்ட விரோத சிங்கள பௌத்த குடியரசைப் பிரகடனப்படுத்தியது. இதனால் 1975இல் ஈழத்தமிழர்களின் அன்றைய அரசியல் தலைமையாக விளங்கிய தமிழரசுக்கட்சியின் தலைவரான சாமுவேல் வேலுப்பிள்ளை யேம்ஸ் செல்வநாயகம் அவர்கள் ஈழத்தமிழர்களை ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்ட சிறிலங்காவின் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக மீளவும் சத்தியப் பிரமாணம் செய்யாது ஈழத்தமிழரின் தன்னாட்சிப் பிரகடனத்தை அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைய சனநாயக முறையில் பிரகடனப்படுத்தினார். இந்த ஈழத்தமிழரின் தன்னாட்சிப் பிரகடனத்தின் 50 வது ஆண்டான 2025 இல் ஈழத்தமிழரின் நடைமுறையரசின் 146000 குடிமக்களை 18.05.2009இல் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு மூலம் தேசமாகவே இனஅழிப்பால் ஒடுக்கி அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு அரசாகக் கடந்து 16 ஆண்டுகளாகத் தொடரும் இன்றைய சிறிலங்கா ஆட்சியார்களுக்கு 2025ம் ஆண்டின் மாவீரர் நாளன்று காலநிலைச் சீர்கேடுகள் உயிராபத்தை ஏற்படுத்திய இயற்கைச்சூழலிலும் உயிரினும் மேலானது இனமானம் என்ற தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அரசியல் நெறிப்படுத்தல் வழி தன்னாட்சி எழுச்சி வேட்கை கொண்டு தேசமாக எழுந்த வரலாற்று நிகழ்வு 27.11. 2025 இல் ஈழத்தமிழர் தாயகத்தில் நிகழ்ந்தமையை உலக வரலாறு பதிவு செய்துள்ளது.
மாவீரர் நாள் என்பதை இறந்தவர்களை நினைவுகூரும் நாளென்று சிறுமைப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம் இறந்தவர்களை நினைவு கூரத் தடையில்லை ஆனால் தங்களால் இனஅழிப்புக்கும் உட்கட்டுமான இனத்துடைப்பு அழிப்புக்கும் பண்பாட்டு இனஅழிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட  நடைமுறையரசின் அடையாளங்கள் எதுவும் இருக்கக் கூடாதென்று அறிவித்த அறிவிப்பை உடைத்து எறிந்து இறைமையுள்ள ஈழத்தமிழர்கள் மாவீரர்நாள் இறந்தவர்களாக யாரையும் பிரகடனப்படுத்தி அஞ்சலி செய்யும் நாளல்ல, மாவீரர் என்றால் மரணத்தை வென்றவர்கள் என்ற மாவீரர்க்கான வரைவிலக்கணத்தை நிறைவு செய்து அவர்கள் விட்டுச் சென்ற பணி தொடருவதற்கு வல்லமை தரும் ஈழத்தமிழர் தாயகத்தின் தேசிய நாள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திடவே மாவீரத் தீபம் ஏற்றப்படுகிறது என்பதை இவ்வாண்டு தாயகத்திலும் உலக இனமாகத் தாம் வாழும் உலக நாடுகளிலும் பல்லாயிரக் கணக்கில் திரண்டெழுந்து நிரூபித்து, ஏக்கிய ராஜ்ஜிய என்ற மகிந்த கோத்தபாய சிறிசேனரணில் அநுரகுமர சிந்தனையான ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்தை ஈழத்தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதைச் சிங்கள ஆட்சியாளர்களுக்கும்  சிங்களவர்கள் ஒருமித்து வாழ மறுத்து இனஅழிப்புச் செய்வதே ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினை என்பதை மறந்து ஒருமித்த அரசு என்று மொழிபெயர்ப்பால் ஈழத்தமிழரை மயக்க முயலும் அனைவருக்கும் தெளிவாக்கியுள்ளனர்.
மேலும் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு ஈழத்தமிழர் தேசிய ஒடுக்கத்தை அனைவரும் சிறிலங்கன் என்ற சிங்கள பேரினவாத தேசிய சிந்தனையாக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தி அதன் பின்னர் ஈழத்தமிழர் என்று ஈழத்தமிழர்கள் தாங்கள் பேசினாலோ எழுதினாலோ அது அரசியலமைப்புக்கு எதிரான தேசத்துரோகக் குற்றமாக அறிவிக்கப்பட உள்ளதாக சில அரசியல் அவதானிகள் எச்சரிப்புச் செய்கின்றனர்.
இந்நிலையில் ஈழத்தமிழர் தன்னாட்சிப் பிரகடனத்தின் ஐம்பதாவது ஆண்டில் தன்னாட்சிக்காகத் தேசமாக ஈழத்தமிழர் தாயகத்தின்  தேசிய நாளாம் மாவீரர் நாளில் தாயகத்திலும் உலகெங்கும் திரண் டெழுந்த ஈழத்தமிழர்கள் 2026 ஈழத்தமிழரின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்னும் ஈழத்தமிழரின் இறைமைப் பிரகடனத்தின் 50 வது ஆண்டாக  அமைவதால் அந்த ஆண்டு முழுவதும் ஈழத்தமிழரின் இறைமையினை உலகுக்குத் தெளிவுபடுத்தும் அறிவூட்டலையும் ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்கும் சிறிலங்காவுக்கு எதிரான சனநாயக மக்கள் போராட்டங்களையும் கட்டமைக்க வேண்டுமென்று மாவீரர் துயிலகங்கள் எங்கும் மக்களின் குரல் எழுந்துள்ளது என்பதை இலக்கு இவ்வாரத்தில் கவனப்படுத்த விரும்புகிறது.
ஆசிரியர்

Tamil News