விடுதலைப்புலி உறுப்பினர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் : ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் தீர்ப்பாயம் இலங்கைக்கு எதிராகத் தீர்ப்பு

இலங்கை  காவல்துறையினரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு தீர்ப்பாயத்தின் 17 பேரடங்கிய நீதியரசர் குழாம் இலங்கைக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிஸ்லாந்துக்குத் தப்பிச்செல்வதற்கு முன்னதாக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரொருவர் சுமார் ஒருமாதகாலமாக கிரிக்கெட் துடுப்புமட்டையால் தாக்கப்பட்டமை, மின்சாரத்தாக்குதல், வன்புணர்வு என்பன  உள்ளடங்கலாகப்  காவல்துறையினரால் மிகுந்த சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரின் சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் முறைப்பாடளிக்கப்பட்டது.

அதன்படி இம்முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் திரட்டப்பட்ட ஆதரங்களின் அடிப்படையாக்கொண்டு மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் தீர்ப்பாயத்தின் 17 பேரடங்கிய நீதியரசர் குழாம் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினருக்கு ஆதரவாகவும், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது.

குறிப்பாக மேற்படி நபரை மிகமோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தியமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் நீதியரசர் குழாம், சுதந்திரமான விசாரணைகளின் மூலம் இச்சித்திரவதைகளுக்குப் பொறுப்பான காவல்துறை  அதிகாரிகளைக் கண்டறியுமாறும், அவர்களுக்கு உரியவாறான தண்டனை வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கை அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

அதுமாத்தரிமன்றி பாதிக்கப்பட்ட நபருக்கு இலங்கை அரசாங்கம் போதியளவான இழப்பீட்டைச் செலுத்தவேண்டும் என்றும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்தைத் திருத்தியமைக்கவேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் தீர்ப்பாயத்தின் 17 பேரடங்கிய நீதியரசர் குழாம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.