சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10), வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு தங்கள் நிலை குறித்து கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தேடி 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருவதாகவும், இந்தப் போராட்டம் நீதியோ அல்லது உரிய பதில்களோ இல்லாமல் தொடர்வதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1948இல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த நாள் முதல், தமிழர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் மிகவும் கொடூரமான இனப்படுகொலையொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், சரணடைந்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற பொய்யான வாக்குறுதியை நம்பி சரணடைந்த 29 குழந்தைகள் உட்பட குடும்பமாகச் சரணடைந்தவர்களும் உறவுகளால் கையளிக்கப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர் என்றும் அந்த கடிதத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர்ச்சியான சோகத்தை சர்வதேச சமூகம் கருத்தில் எடுக்கத் தவறிவிட்டது ஏன்? என்றும் சங்கத்தினர் தங்களின் கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் ஒரு வருடமாக அதிகாரத்தில் உள்ள போதிலும் இதுவரை நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் டிட்வா புயல் போன்ற காரணங்களால் அரசாங்கத்துக்கு தங்கள் விடயத்தில் கவனம் செலுத்த நேரமில்லை என்றும், இனத்துவேசத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் இருக்கும் வரை, எந்தவொரு ஜனாதிபதியும் எதிர்ப்புகளை மீறித் தங்களுக்கு நீதியை வழங்கத் தயாராக இருக்க மாட்டார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை மூலமே காலதாமதமின்றி வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், இனப்படுகொலை, சர்வதேச குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.



