பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

மன்னார் மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மன்னார் தீவு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிம மண் அகழ்வு திட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கூட்டாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும், மக்களின் விருப்பத்தை நிராகரித்து விட்டு, முந்தைய ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலே தற்போதும் முன்னெடுக்கப்படுவது மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும், திட்டமிட்டபடி 14 காற்றாலைகளை அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கனிம மண் அகழ்வு முற்றாக நிறுத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும், தற்போது இரண்டு நிறுவனங்கள் தொடர்ந்து அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அத்துடன் மன்னார் மாவட்டம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி எனவும் அதன் இயற்கை இயல்பைச் சிதைத்து, வளங்களைச் சுரண்டுவது மக்களின் வாழ்வியலை கடுமையாகப் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முறையான நிவாரணங்கள் கூட வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், மக்களின் காணிகளை அபகரித்து முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எவ்விதத்தில் நியாயம் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

எனவே, ஜனாதிபதி இந்த விவகாரத்தில் தலையிட்டு, மக்களின் காணிகளை மீள ஒப்படைக்கவும், சூழலைப் பாதிக்கும் திட்டங்களை நிறுத்தவும் முன்வர வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.