தனித்தனியாக அல்லாமல் கூட்டாகச் செயல்பட்டு, மத்திய கிழக்கு போர்ச் சூழலால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெல்வோம். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்காலத்தில் உருவாகியுள்ள புதிய பொருளாதார வாய்ப்புகளை இலங்கைக்குள் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம். அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து வணிக சமூகத்தினரும் முன்வரவேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக வலியுறுத்திய ஜனாதிபதி, நவீன உலகத்துடன் முன்னோக்கிச் செல்லத் தவறியதால் ஒரு தேசமாக நாம் இழந்த பொருளாதார வாய்ப்புகளை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் குறிப்பிட்டார்.
இதற்காக அரசாங்கம் ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்துள்ளதாகவும், அதில் டிஜிட்டல் மயமாக்கல் ஒரு முக்கிய அங்கமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
செயற்கை நுண்ணறிவு, தரவு மையங்கள் போன்ற பொருளாதார வாய்ப்புகள் குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் டிஜிட்டல் மயமாக்கலுக்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 6.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் டிஜிட்டல் அடையாள அட்டையை எப்படியாவது வெளியிட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர் சபையின் (COYLE) 2026 வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.



