”தமிழால் இணைவோம்” என்பது வெறும் வார்த்தையாக இருக்கக் கூடாது: கடற்றொழிலாளர் இணையம் வலியுறுத்தல்

தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட ‘அயலகத் தமிழர் தின’ நிகழ்வுகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள வட மாகாண கடற்றொழிலாளர் இணையம், அதேவேளை வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் இத்தகைய முன்னெடுப்புகளில் உள்வாங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

மன்னாரில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் இதனைத் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை வரவேற்கத்தக்கது.

இது தமிழர்களிடையே ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்துகிறது.

தமிழகத்திற்கும் இலங்கை வடபகுதிக்கும் இடையிலான உறவு என்பது அரசியல் அல்லது மொழி சார்ந்தது மட்டுமல்ல; அது ஒரு ஆழமான தொப்புள்கொடி உறவாகும்.

“தமிழால் இணைவோம்” என்ற முழக்கம் வெறும் வார்த்தையாக மட்டும் இருந்துவிடக் கூடாது. நடைமுறையில் தமிழக மற்றும் வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பாதிப்புகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

“இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு தமிழால் இணையக்கூடியது.

ஆனால், இரு நாட்டு கடற்றொழிலாளர்களும் இன்று பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த உறவு வெறும் கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் குடும்ப நலன்களையும் கருத்தில் கொண்டதாக அமைய வேண்டும்.”
தமிழக அரசுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவு மேம்படும் அதேவேளை, கடற்றொழில் எல்லைப் பிரச்சினைகள் மற்றும் மீனவர் நலன் சார்ந்த விடயங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை அவர் தனது உரையில் வலியுறுத்தினார்