தேயிலை பயிரிடப்படாத அரசாங்கத்தின் காணிகள் மற்றும் தேயிலை பயிரிடப்படாத தனியாரின் காணிகளை பெருந்தோட்டங்களில் சேவை புரிகின்ற தோட்ட தொழிலாளர்களுக்கும், தொழில் இல்லாத இளைஞர்களுக்கு வழங்கி சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றி அவர்களின் பங்களிப்பை தேயிலை உற்பத்திக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டின் தேயிலை உற்பத்திக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்கின்ற உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்காவது பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.



