யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடியை பறக்க விட்ட மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக இம்முறை கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து தமிழர் தாயகத்தில் இம்முறை போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இதைமுன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கறுப்புக்கொடி பறக்க விடப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அண்மைய கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட சுதந்திர தினத்தன்றும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஒளிப்படங்களுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழகத்துக்கு அறிக்கை அனுப்பியிருந்தது.

எனினும், யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பிலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அண்மைய கலந்துரையாடலில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறாமல் எவ்வாறு தவிர்ப்பது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.இது தொடர்பாகவும் விசேட அறிக்கையொன்றை வழங்குமாறு பல்கலைக்கழகத்தைக் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.