கண்டி, கேகாலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தற்போது நிலவும் சீரற்ற வானிலை:   கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக  மண்சரிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட  3 ஆம் நிலை சிவப்பு அபாய எச்சரிக்கைகளுக்கு இணங்க, இந்த வெளியேற்ற அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நான்கு மாவட்டங்களிலும் அதிக ஆபத்துள்ள பல பகுதிகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம்  அடையாளம் கண்டுள்ளது. எனவே உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

அதன்படி, இன்று 09 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான மையங்களுக்கு வெளியேற்றுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள், பொலிஸ் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் வெளியேற்ற நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவு தொடர்பில்   3 ஆம் நிலை சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் பின்வருமாறு:

கண்டி மாவட்டம்: ஹதரலியத்த, யட்டிநுவர, உடதும்பர, பாதஹேவாஹெட்ட, மெடதும்பர, பஸ்பகே கோரளை, தெல்தோட்டை, பூஜாபிட்டிய, கங்கா இஹல கோரளை, பன்வில, கங்காவட கோரளை, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிப்பே, தொலுவ, தும்பனை, அக்குரணை, உடுநுவர, பாததும்பர மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.

கேகாலை மாவட்டம்: கேகாலை, கலிகமுவ, மாவனெல்ல, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, யட்டியந்தோட்டை, ரம்புக்கன, வரக்காபொல மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.

குருநாகல் மாவட்டம்: மாவத்தகம, மல்லவபிட்டிய, ரிதீகம மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.

மாத்தளை மாவட்டம்: நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பங்கங்க கோரளை, லக்கல பல்லேகம, உக்குவெல, ரத்தோட்டை, மாத்தளை, யடவத்த மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.

இந்நிலையில், வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. இதனால் இன்று செவ்வாய்க்கிழமை (09) வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மழை வீழ்ச்சி 19 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என  வானிலை முன்னறிவிப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.