யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்படையினரின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளின் ஊடாக விடுவிக்கப்படும் என வடபிராந்திய கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பி.லியனகமகே உறுதியளித்துள்ளார்.
காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் கடற்படைத் கட்டளை தளபதி தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கடற்படை வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும், கடற்படைக்கு அத்தியாவசியமான காணிகளை முறையான சட்ட நடைமுறைகள் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
அதேநேரம் , இந்த கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை, கடல்வழியாக நடைபெறும் கடத்தல்களைக் கட்டுப்படுத்துதல், ‘வட தாரகை’ கப்பலைத் திருத்தம் செய்தல், ‘எழுதாரகை’ கப்பலை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் போன்ற கடல் விவகாரங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், கடற்கரைத் தூய்மைப்படுத்தல், திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் கடற்கரை வீதி புனரமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் சூழல் சார்ந்த முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.



