கிண்ணியா பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணி , கட்டுமானங்கள் சுற்றுலா அமைச்சுக்கு மாற்றம்!

கிண்ணியா பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த காணி மற்றும் கட்டுமானங்களை, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு கையளிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திருகோணமலை, உப்பாறு பகுதியில் அமைந்துள்ள குறித்த 12 ஏக்கர் காணியில் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தை அமைப்பதற்கு 2017ஆம் ஆண்டு அங்கீகாரம் வழங்கப்பட்டு, சுமார் 25.45 மில்லியன் ரூபா செலவில் கட்டுமானங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும், தற்போது நிலவும் சூழலில் குறித்த இடத்தில் விஞ்ஞான நிறுவகத்தை அமைப்பது அவசியமற்றது என தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கட்டுமானப் பணிகளை நிறுத்தவும், அந்த பகுதியை சுற்றுலாத்துறைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதற்கான யோசனைக்கு நேற்று (10) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.