கருணா உருவாக்கியுள்ள புதிய சர்ச்சை; தேர்தலுக்குப் பயன்படுத்தும் கட்சிகள்-அகிலன்

கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தன்னுடைய தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு நிகழ்த்திய உரை கொழும்பு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கருணாவுடன் அரசியல் உறவை வைத்திருக்கும் ராஜபக்‌ஷக்களின் அரசாங்கத்துக்கும் இது சங்கடத்தைக் கொடுத்திருக்கின்றது. சிங்களத் தேசியவாதக் கட்சிகளின் அழுத்தங்களால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அவர் அழைக்கப்பட்டார். ஏழு மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இதன்மூலம் தமக்கு வந்த நெருக்கடியை அரசாங்கம் ஓரளவுக்குச் சமாளித்துக்கொண்டிருக்கின்றது.

கருணா குறித்து இப்போது உருவாக்கியுள்ள பிரச்சினை இலங்கை அரசியலிலோ அல்லது வரப்போகும் தேர்தலிலோ ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. குறிப்பாக ராஜபக்‌ஷக்களுடனான கருணாவின் உறவை இது பாதிக்குமா என்ற கேள்வியும் உள்ளது.

தன்னை “கொரோனாவை விட மோசமான ஒருவர்” என எதிரணியைச் சார்ந்த பிரதேச சபைத் தலைவர் ஒருவர் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலடி கொடுக்க முற்பட்டே புதிய சர்ச்சையில் கருணா சிக்கிக்கொண்டார். “ஆம் நான் கொரோனாவைவிட மோசமானவன்தான். கொரோனாவினால் 9 பேர் மட்டும்தான் பலியானார்கள். ஆனால், நாம் ஆனையிறவில் ஒரே இரவில் 2,000, 3,000 படையினரைக் கொன்றோம். அதனால், நான் கொரோனாவைவிட கொடியவன்தான்” என்ற வகையில் அவரது உரை அமைந்திருந்தது.

கருணாவின் இந்த உரையைப் பயன்படுத்த முற்பட்ட எதிர்க்கட்சியினர், அதன் மூலம் ராஜபக்‌ஷக்களுக்கு நெருக்கடியைக் கொடுக்க முற்பட்டார்கள். ஆனால், அது எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை.Sajith Premadasa Blame To Ravi Karunanayake Publicly கருணா உருவாக்கியுள்ள புதிய சர்ச்சை; தேர்தலுக்குப் பயன்படுத்தும் கட்சிகள்-அகிலன்

கருணா விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக இருந்திருந்தாலும், தலைமையுடன் முரண்பட்டு அரசுடன் இணைந்து செயற்பட்டவர். அதனால், அவரைத் துரோகியாகப் பார்க்கும் நிலையில்தான் தமிழ் மக்கள் உள்ளார்கள்.

கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் ஒரு பிரதி அமைச்சராக அவர் இருந்திருந்தாலும், தேசியப் பட்டியல் மூலமாகத்தான் பாராளுமன்றத்துக்கு வந்தவர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவது தனக்குச் சாத்தியமாகாது என்பது அவருக்குத் தெரியும். அரசாங்கமும் அவரை அரவணைத்து தேசியப் பட்டியல் ஆசனத்தை மட்டுமன்றி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியையும், பிரதி அமைச்சர் பதவியையும் கொடுத்தது. மகிந்த ராஜபக்‌ஷ கருணா விடயத்தில் கையாண்ட மென் போக்கின் விளைவு இது.

இந்த முறை மக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை கருணாவுக்கு இருந்தது. அதற்காக அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கயிருக்கின்றார். சிங்கள – பௌத்த கடும்போக்குவாதிகளின் ஆதரவுடன் தேர்தலைச் சந்திக்கும் ராஜபக்‌ஷக்களின் பொதுஜன பெரமுன, கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக தம்முடன் இணைந்து பயணித்த கருணாவை தமது கட்சியின் சார்பில் களமிறக்க விரும்பவில்லை. அதன் பின்னணியில் இருக்கக்கூடிய அரசியல் சூட்சுமங்கள் புரிந்துகொள்ளக் கூடியவைதான்.z p04 Is Karuna1 கருணா உருவாக்கியுள்ள புதிய சர்ச்சை; தேர்தலுக்குப் பயன்படுத்தும் கட்சிகள்-அகிலன்

ஆனால், கருணா வெற்றி பெற்றால் அமையப்போகும் ராஜபக்‌ஷ அரசில் அமைச்சுப் பதவி ஒன்று அவருக்கு நிச்சயமாக வழங்கப்படும். பொது ஜன பெரமுனவைக்கு ஆதரவான சிறுபான்தைக் கட்சிகள் அனைத்தையுமே தமது சொந்தக் கட்சிகளின் சார்பில் போட்டியிடுமாறு அக்கட்சியின் உபாயங்களை வகுப்பவரான பசில் ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்தார்.

பொது ஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டால் சிறுபான்மையின வாக்குகளை அவர்களால் பெற முடியாமல் போகலாம் என்பதால் இந்த ஏற்பாடு. அதன்படிதான் டக்ளஸ் கூட வீணைச் சின்னத்தில்தான் களமிறங்கியுள்ளார். ஆனால், வென்றால் அமைச்சர் பதவி கிடைக்கும்.

பசில் வகுத்த திட்டத்தின்படிதான் கருணாவும் தனியாகக் களமிறங்கவேண்டிய நிலை அதனால் ஏற்பட்டது. தனியாகக் களமிறங்கும் கருணாவுக்கு தமிழ் வாக்குகளைக் கவரவேண்டுமானால், இது போன்ற தமது வீரப் பிரதாபங்களை எடுத்துவிட வேண்டிய தேவை இருந்தது. ராஜபக்‌ஷக்களின் அணியில் இல்லாமல் தனியாகக் களமிறங்கியிருப்பதால், இவ்வாறான உரைகளை நிகழ்த்துவதற்கான சுதந்திரம் தனக்கிருப்பதாக அவர் கருதினார்.

ஆனால், அவரது உரை அதிகளவுக்கு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே தெரிகின்றது. ஆனையிறவுப் போரில் கருணா எந்தளவுக்குச் சம்பந்தப்பட்டார்? என்பன போன்ற விடயங்கள் தனியாக ஆராயப்பட வேண்டியவை. கருணாவுக்குக் கூட, விடுதலைப் புலிகளுடன் தன்னைச் சம்பந்தப்படுத்தியே தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்க வேண்டும் என்ற நிலை இருக்கின்றது. இது நெருக்கடி ஒன்றை ஏற்படுத்தும் என்பது அவர் எதிர்பார்க்காதததாக இருந்திருக்கலாம். தான் ராஜபக்‌ஷக்களுடன் இருப்பதால், பிரச்சினை வராது என்பது அவர் கருதியிருக்கலாம்.karuna pasil கருணா உருவாக்கியுள்ள புதிய சர்ச்சை; தேர்தலுக்குப் பயன்படுத்தும் கட்சிகள்-அகிலன்

ஆனால், நெருக்கடி பூதாகரமாகி எதிர்க்கட்சிகள் இதனைத் தமது அரசியலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது பரப்புரைக் களத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. சிங்கள தேசியவாத தளத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தைத் தாக்குவதற்குக் கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பமாக எதிர்க்கட்சிகள் இதனைக் கையில் எடுத்துள்ளன. குறிப்பாக சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, இது தமது பரப்புரைகளுக்குக் கிடைத்துள்ள சிறந்த விடயமாகக் கருதிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. பதிலடியாக அரச தரப்பு சஜித்தின் தந்தை பிரேமதாசவை கையில் எடுத்திருக்கின்றது. புலிகளுக்கு அவர் ஆயுதம் கொடுத்தார் என்ற பிரசாரத்தை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள்.

தன்னுடைய வாக்கு வங்கியை சற்று அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கையில் கருணா கொடுத்த பதிலடி இப்போது தெற்கு அரசியலை சூறாவளியாக்கியுள்ளது. குற்றம்சாட்டும் சஜித் தரப்புக்குப் பதிலடி கொடுக்க மகிந்தவும், கருணாவும் ஒரே ஆயுதத்தைத்தான் பயன்படுத்தினார்கள். அதாவது, பிரேமதாசவும் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார் என்பதுதான் அந்தக் கருத்து. ஆனால், இந்த உரைகள் அனைத்தும் தேர்தல்கால உரைகளாகத்தான் உள்ளன. அதற்கு மேலாக அவதற்கு அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்தலின் பின்னர் ராஜபக்ஷக்களுடனான கருணாவின் உறவு தொடரத்தான் போகின்றது.