பிரித்தானியா தலைமையிலான மையக்குழு நாடுகளால் அண்மையில் முன்மொழியப்பட்ட இலங்கை தொடர்பான புதிய பிரேரணையில் தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, மோதல்கள் என்ற சொல்லின் ஊடாக இனப்பிரச்சினை என்ற சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருக்கிறது.
அத்துடன் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன சிறப்பு சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்தியேக நீதித்துறை பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரின் போது நிறைவேற்றும் வகையில் பிரித்தானியா தலைமையிலான மையக்குழு நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்பிரேரணை தொடர்பான உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடல் நடைபெற்றதுடன், அதில் பங்கேற்றிருந்த இலங்கையின் பிரதிநிதிகள் அதனை நிராகரித்திருந்தனர். இந்த பின்னணியில் இலங்கை தொடர்பான மையக் குழு நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது.
முதலாவதாக வெளியிடப்பட்ட பிரேரணையுடன் ஒப்பிடுகையில், இதில் கணிசமான திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இதன்படி சகல தரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் செயற்திறன்மிக்க பொறுப்புக்கூறல் செயன்முறை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னைய பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அது தற்போது வெறுமனே பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று திருத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரதானமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்த விடயம், ‘பயங்கரவாதத் தடைச்சட்டம் விகிதாசார அடிப்படையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களை அதிகமாகப் பாதிக்கிறது’ என்று திருத்தப்பட்டுள்ளது.