கஸ்ஸப தேரரின் அச்சுறுத்தல்: பிக்குகள் உண்மையை கூற அஞ்சுவதாக தகவல்கள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர், தன்னுடன் சிறையிலுள்ள மற்ற மூன்று பிக்குகளை அச்சுறுத்தித் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சிலை விவகாரம் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், இது குறித்து நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி வழக்கிலிருந்து விடுபட அந்த மூன்று பிக்குகளும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் விடுதலை பெற்றால் தனது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்பதால், அவர்களை உண்மையைச் சொல்லவிடாமல் கஸ்ஸப தேரர் தடுத்து வருவதாகத் தெரியவருகிறது.

திருகோணமலை போதிராஜ விகாரையில் கரையோரப் பாதுகாப்புச் சட்டங்களை மீறி புத்தர் சிலையை நிறுவிய வழக்கில், கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகள் உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரமானது பௌத்த மக்களிடையே திட்டமிட்டு சிக்கல்களை ஏற்படுத்தும் நோக்கில் கஸ்ஸப தேரரால் முன்னெடுக்கப்படுவதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.