இந்தியா மீதான கொள்கை நிலைப்பாடு ஜேவிபி (JVP)கருத்து

இந்தியாவை ஒரு நம்பிக்கைக்குரிய நண்பராகவும், பங்குதாரராகவும்தான் கருதுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா தொடர்பான தனது கட்சியின் பழைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக, மக்கள் விடுதலை முன்னணியின், ஆரம்ப காலத்தில் ‘இந்திய விரிவாக்கக் கொள்கை’ குறித்து ரோஹண விஜேவீர கொண்டிருந்த கடுமையான கருத்துக்கள், ரில்வின் சில்வாவின் இந்தியப் பயணத்துக்குப் பின்னர், மாறியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, புதுடெல்லியில் நடைபெற்ற 2026 செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கையில் நடைபெற்று வரும் இந்தியத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் தாமதங்கள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

பேச்சுவார்த்தைகளின் போது இந்தியா நிதியளிக்கும் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து நரேந்திர மோடி விசாரித்ததாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து மேலதிக உதவி தேவையா? என்பது தொடர்பாகவும், தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் நிலை குறித்தும் இந்தியப் பிரதமர் இதன்போது கேட்டறிந்துள்ளார்.