காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விரைந்து நீதி வழங்கவேண்டும்: ரவிகரன் எம்.பி. வலியுறுத்து

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற குழுநிலை வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைக்கோரி அவர்களது உறவினர்கள் வடக்கு, கிழக்கில் மூவாயிரம் நாள்களைக் கடந்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது பிள்ளைகளைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலநூற்றுக்கணக்கான பெற்றோர் வயது முதிர்வாலும், நோய்வாய்ப்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

எப்போது இவர்களுக்கான நீதியை வழங்கப் போகின்றீர்கள்? இவ்வாறு அனைவரும் மரணித்த பின்புதான் நீதியை வழங்கப்போகின்றீர்களா? அவ்வாறெனில் அது நீதியாகுமா? காலம் கடந்த நீதிமறுக்கப்பட்ட நீதிக்குச் சமன் என்பதைக் கருத்திற்கொண்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கோரிக்கைக்கு அமைவாக, சர்வதேச நீதி விசாரணையின் ஊடாக அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தச் சபையைக் கோருகின்றேன் – என்றார்.