பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் உள்ள தமிழர்களின் உறவினர்கள் தம்மிடம் விடுத்த கோரிக்கை தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நால்வரும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 8 பேரும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே நீதி அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாழ்நாள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேர் உள்ளதாகவும் அவர்களில் இருவர் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டை விதிக்கப்பட்ட 2 கைதிகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெலிகடை சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மஹர சிறைச்சாலை மற்றும் பூசா உள்ளிட்ட சிறைச்சாலைகளில் உள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர்களின் தண்டனை காலம் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று நம்புவதாகவும், அதற்கான பதிலை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, அரசியலமைப்பின்படி, பொது மன்னிப்பு தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதாகவும் மாறாக நீதி அமைச்சருக்கு அவ்வாறான அதிகாரம் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் உள்ள சில கைதிகளின் உறவினர்கள் அண்மையில் தம்மை சந்தித்ததாகவும் அவர்கள் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.
அவர்களால் வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பில் என்ன செய்ய முடியும் என்பது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு புறம்பாக தம்மால் எந்த வாக்குறுதியையும் வழங்க முடியாது என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பதிலளித்தார்.