இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி அவசியம் – உமா குமரன் எம்.பி

பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டனில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வெள்ளிக்கிழமை (16) தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

பிரித்தானிய வசிக்கும் சமூகங்களுக்கான செயலாளர் ஸ்டீவ் ரீட் மற்றும் இலங்கை தமிழ் வம்சத்தைச் சேர்ந்த முதல் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக டவுனிங் ஸ்ட்ரீட்டில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக் காலத்திலும் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்ததுடன், தற்போது இது பிரித்தானிய அரசியல் நாட்காட்டியில் ஒரு வருடாந்த நிகழ்வாக நிலைபெற்றுள்ளது.

இந்த வரவேற்பு நிகழ்வில் பிரித்தானிய தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள், சமூக தலைவர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், அரச பணியாளர்கள் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தலைமுறை தாண்டி பல துறைகளில் பிரித்தானிய சமூக வளர்ச்சிக்கு தமிழர்கள் வழங்கி வரும் பங்களிப்பை இந்த நிகழ்வு பிரதிபலித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தனது உரையில், இந்த நிகழ்வு அங்கீகாரத்தையும் புதுப்பிப்பையும் குறிக்கும் ஒன்றாகும் என தெரிவித்தார்.

“பிரித்தானிய தமிழர் சமூகத்தின் வெற்றி, நவீன பிரித்தானியாவின் வாக்குறுதியையும் தமிழ் புலம்பெயர் சமூகத்தின் திடநம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்துகிறது,” என அவர் கூறினார்.

தனது பெற்றோர் இலங்கையில் இழந்த வாய்ப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப பிரித்தானியாவில் கடினமாக உழைத்ததாகவும், அந்தக் கதையே லண்டன் முழுவதும் மற்றும் பிரித்தானியாவின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களுக்குப் பொதுவான ஒன்றாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தைப்பொங்கல் அறுவடையையும் நம்பிக்கையையும் குறிக்கும் திருநாளாகும் என அவர் குறிப்பிட்டதுடன், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற தமிழ் பழமொழி புதிய ஆண்டிற்கான புதுமையும் முன்னேற்றத்தையும் குறிக்கிறது என்றார்.

மேலும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகை மனித உரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற தனது அரசின் நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். இதன் ஒரு பகுதியாக, போர் குற்றவாளிகளுக்கு எதிராக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் விதித்துள்ள தண்டனைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.