ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை: சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும் -ஜனாதிபதிக்கு மகஜர்

Unknown 1 3 ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை: சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும் -ஜனாதிபதிக்கு மகஜர்

சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுவினராலும், இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கைது, கடத்தல் சம்பங்கள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டமைக்கும் தசாப்தங்கள் கடந்தும் நீதி வழங்கப்படாத நிலையில், சுயாதீன சர்வதேச விசாரணையே  நீதி கிடைக்க வழிவகுக்கும் என ஜனாதிபதிக்கு யாழ் வடமராட்சி ஊடக இல்லம்  தெரிவித்துள்ளது.

துன்னாலை கலிகை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வைத்து ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் கடந்த 15.02.2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் ஈபிடிபியினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதன் 19 ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதி கேட்டும் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இன்று  கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு மகஜர் வாசிக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கான குறித்த மகஜரை ஆளுநர் ஊடாக அனுப்பிவைக்கவும் இதன் பிரதிகளை ஐ.நா. பொதுச்செயலாளர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்பு சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுக்கும் அனுப்பிவைக்கப்பட உள்ளது.

letter

குறித்த மகஜிர் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி கோரல்…

யாழ்ப்பாணம் – வடமராட்சி, துன்னாலையை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் (கடத்தப்படும் போது 37 வயது) சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் இணைந்து கடந்த 15.02.2007 அன்று கலிகை இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு பின் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

கலிகை சந்தியில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் படை முகாமில் வைத்து சம்பவதினத்தன்று மாலை விசாரணைக்காக அழைத்துச் செல்லபட்டமையும், குறித்த சம்பவத்துடன், அக்காலகட்டத்தில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களுக்கும் நேரடி தொடர்பு இருந்தமை தொடர்பிலும், வடமராட்சி – பல்லப்பை படை முகாமில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பிலும் கண்கட்ட சாட்சியங்களின் அடிப்படையில் முன்னைய ஜனாதிபதி ஆணைக்குழுவான பரணகம ஆணைக்குழுவில் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாது தொடரந்து வந்த சகல விசாரணை நடவடிக்கைகளின் போதும் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் எதுவித பதிலிறுப்புகளும் வழங்கப்படவேயில்லை.

கைது செய்யப்பட்டது முதல் ஒரு வாரம் கைத்தொலைபேசி மூலம் அவரது சகோதரிகளுடன் இராமச்சந்திரன் தொடர்பில் இருந்துள்ளார். இதன்போது கலிகை படைமுகாமில் வைத்து தான் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பிலும், இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவரே நேரடியாக தெரிவித்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் இடம்பெற்று இன்று 19 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அரசு தரப்பில் இது தொடர்பில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டறியவோ, உரிய நீதி விசாரணை முன்னெடுக்கப்படவோ, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவோ எதுவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இடைப்பட்ட காலத்தில் 2018 ஆம் ஆண்டின் இறுதி காலகட்டத்தில் மூன்று மாத இடைவெளியில் தந்தையும், தாயும் தமது மகனை காணமலேயே அடுத்தடுத்து உயிரிழந்திருந்தனர். ஏனைய கண்கண்ட சாட்சியங்களும் கால நீட்சியில் மரணித்துவிட்டன. இந்நிலையில் இராமச்சந்திரனின் சகோதரி மட்டுமே தற்போது உயிர்வாழும் சாட்சியமாக நம்மிடையே வாழ்ந்து வருகின்றார். அதுமாத்திரமல்லாது, காலநீட்சியும் ஏமாற்றமும் ஏற்படுத்திய உளச்சோர்விற்கு ஆட்பட்டுள்ள நிலையிலும் இன்றும் தனது சகோதரனை காணும் பேராவலுடன் அவரது சகோதரி ஏக்கத்துடன் காத்திருக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்ட பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்பதனை நிரூபிக்கும் வகையிலான வலுவான சாட்சியங்களும், நேரில் கண்ட சாட்சிகளும் உள்ளதான வெகு அரிதான சம்பவங்களில் ஒன்றாக இராமச்சந்திரனின் விடயம் இருந்த போதிலும் இதுவரை அதற்கான நீதிப்பொறிமுறை ஆரம்பிக்கப்படாமலே வலிந்து மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் என 44 பேர் கொல்லப்பட்டும், கடத்தப்பட்டும் உள்ளனர் என இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு அறிக்கையிட்டுள்ளது. இதுதவிர இறுதிப் போர் காலகட்டத்திலும் இவ்வாறு பலர் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் ஊடக நிறுவனங்கள் மீதும் காலத்திற்கு காலம் பாரதூரமான தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை எதற்குமே இதுவரை எவ்வித நீதி விசாரணைகளும் மேற்கொள்ளப்படாதுள்ளது.

ஆகவே, சிறிலங்கா அரசபடைகள் மற்றும் அதனோடு இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழுக்களினாலும், இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கைது மற்றும் கடத்தல் சம்பவங்கள் மூலம் காணமல் ஆக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டமைக்கும், சுயாதீன சர்வதேச விசாரணை மூலமே எஞ்சியிருக்கும் சாட்சியங்களும் மௌனிக்கும் முன்னராவது உரிய நீதி கிடைக்க வழிவகுக்கும் என நாம் திடமாக நம்புகின்றோம்.

குறித்த சம்பவத்தோடு மட்டுப்படுத்தப்பட்டதாக விசாரணை நடவடிக்கைகள் முற்றுப்பெறாது பின்னிருந்து செயற்படுத்திய உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நீதி நிலைநாட்டப்படுவதனை உறுதிசெய்யும் வகையிலானதாக முன்னெடுக்கப்பட வழிவகை செய்ய வேண்டும். தமிழ் ஊடகத்துறை மீது காலத்திற்;கு காலம் வெவ்வேறு வடிவங்களில் தொடரும் அச்சுறுத்தல் நிலையினை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கு காரணமானவர்களை பாரபட்சமின்றி சட்டத்தின் முன்நிறுத்தி உரிய நீதியினை வழங்குவதற்கும் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்தருணத்தில் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி நிற்கின்றது என்றுள்ளது.