வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது.
இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எமது மக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் இனத்திற்காகவும் போராட்டம் ஒன்றிற்கான அழைப்பினை இதன்பொழுது விடுக்கின்றோம்.
கடந்த மாதம் காணி சுவீகரிப்பு தொடர்பாக காணி அமைச்சின் மேலதிக செயலாளர் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறிப்பாக வடகிழக்கில் தொடர்சியாக காணி சுவீகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளது.
இது தடுத்து நிறுத்தப்படவேண்டும் அந்தவகையில் வலி வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணியளவில் எமது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கூடிய மதகுருமார், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரையும் கட்சி பேதமின்றி பங்கெடுக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அ.விஜயகுமார், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர், எஸ் றாபின், யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.