யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த 54 வயதுடைய திலீபன் தயாளினி என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் நேற்று தனங்கிளப்பு – அறுகுவெளி பகுதியில் உள்ள புதர் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 19 வயதுடைய மகள் மற்றும் 21 வயதுடைய மருமகன் ஆகிய இருவரையும் திருகோணமலை பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, தனது தாயையும் சகோதரியையும் காணவில்லை என விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாண காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பாண்டியன்தாழ்வு பகுதியில் உள்ள அவர்களது இல்லத்திற்குச் சென்ற காவல்துறையினர், அங்கு வீட்டின் கூரை ஓடுகள் கழற்றப்பட்டிருந்ததையும், கயிறு மற்றும் வெட்டப்பட்ட தலைமுடி உள்ளிட்ட தடயங்களையும் கண்டறிந்தனர்.
தொழில்நுட்ப ஆதாரங்களான ஏ.டி.எம் பணப்பரிமாற்றம், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ‘QR’ தரவுகள் மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் வேட்டையில் சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலையில் வைத்து அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விரிவுரையாளர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டு சடலம் மறைக்கப்பட்டமை தெரியவந்தது.
சடலம் மீட்கப்பட்ட பகுதி சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குட்பட்டது என்பதால், பதில் நீதவான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். பின்னர், உயிரிழந்தவரின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண காவல்துறையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.



